தங்க நகைகளுக்கு இனி ‘இது’ கட்டாயம்.. இன்று முதல் அமலுக்கு வந்த ‘புதிய’ விதி.. மத்திய அரசு அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > வணிகம்இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது.

உலகில் அதிகளவில் தங்கத்தை விற்பனை செய்யும் நாடாக இந்தியா இருந்து வருகிறது. அதனால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்க நகைகளின் தரத்தை கண்காணிப்பதற்காக, கடந்த 2000-ம் ஆண்டு தங்க நகைகளுக்கு ஹால்மார்க் தர முத்திரை இடும் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
உலக தங்க கவுன்சிலின் புள்ளிவிவரங்கள்படி, இந்தியாவில் 4 லட்சத்துக்கும் மேலான நகை விற்பனையாளர்கள் உள்ளனர். ஆனால் அவற்றில் 35,879 விற்பனையாளர்கள் மட்டுமே இந்திய தர நிர்ணய கழகத்தின் ஹால்மார்க் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர். பெரும்பாலான விற்பனையாளர்கள் தர நிர்ணய அங்கீகாரம் பெறாத தங்க நகைகளை விற்பனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற விதி அமலுக்கு வரும் என்ற அறிவிப்பை, கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்தது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணத்தினால், சில மாதங்கள் கால அவகாசம் வேண்டும் என்று தங்க நகை விற்பனையாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் வழங்கியது. நேற்றுடன் இந்த அவகாசம் முடிவடைந்த நிலையில், முதற்கட்டமாக நாடு முழுவதும் 256 மாவட்டங்களுக்கு இன்று (16.6.2021) முதல் புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டாய ஹால்மார்க் நடைமுறையின் மூலம் குறைந்த தரத்தில் தங்க நகைகள் விற்கப்படுவது நிறுத்தப்படும் என்றும், தங்க நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்கள் ஏமாறாமல் பாதுகாக்கப்படுவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
