‘ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு அனுமதி’... ‘தயாராகும் இந்திய நிறுவனங்கள்’... 'எப்போதிலிருந்து, என்னென்ன பொருட்கள் ஆர்டர் செய்யலாம்’!
முகப்பு > செய்திகள் > வணிகம்வரும் 20-ம் தேதி முதல் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான அமேசான், பிளிப்ஃகார்ட், ஸ்நாப்டீல் போன்றவை விற்பனையைத் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வரும் மே மாதம் 3-ம் தேதி வரை லாக் டவுன் நடைமுறை இருந்தாலும், வரும் 20-ம் தேதிக்குப் பின் சில தொழில்களுக்கு விதிமுறைகளைத் தளர்த்தி நேற்று அரசு வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டது. இதுகுறித்து உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி அளித்துள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ''அமேசான், பிளிப்ஃகார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தகத் தளங்களில் வரும் 20-ம் தேதி முதல் அனைத்து வகையான பொருட்களையும் மக்கள் ஆர்டர் செய்யலாம்.
உதாரணமாக மொபைல் ஃபோன், டிவி, லேப்டாப், ஸ்டேஷனரி உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களையும் விற்பனை செய்யலாம். அதேசமயம், அந்தப் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்வதற்கு அந்தந்த உள்ளூர், நகர அதிகாரிகளிடம் முறையாக நிறுவனங்களின் முகவர்கள் அனுமதி பெற வேண்டும். அதாவது வாகனங்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை டெலிவரி செய்யும் பிரிவில் இருக்கும் பணியாளர்களுக்கும், வாகனங்களுக்கும் அனுமதி பெறுவது கட்டாயம்.
இதற்கு முந்தைய அறிவிப்பில் உணவு, மருந்துப்பொருட்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. பொருட்களை டெலவிரி செய்யும் பிரிவில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதால் அவர்களின் பாதுகாப்பு, நலன் ஆகியவற்றில் முக்கியத்துவம் செலுத்துவது அவசியம். கண்டிப்பாக சமூக விலகலைக் கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது'' இவ்வாறு மூத்த அதிகாரி விளக்கம் அளித்தார். எனினும் அதிகளவில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்த அனுமதி கிடையாது என்று கூறப்படுகிறது