'உன்ன தனியா விட்ர மாட்டேன் கொல்லம்மா'... 'எந்த மனைவிக்கும் இந்த துயரம் வர கூடாது'... நொறுங்கிய இதயத்துடன் வந்த சென்னை பெண்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சரக்கு விமானத்தில் கணவர் சடலத்துடன் சென்னைக்குப் பெண் ஒருவர் வந்த சம்பவம், பலரையும் கண்கலங்கச் செய்துள்ளது.
துபாயில் உள்ள ராஸ் அல் கைம்மாவில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் தரக் கட்டுப்பாட்டு மூத்த அதிகாரியாகப் பணியாற்றி வந்தவர் குமார். இவருக்கும் கொல்லம்மா என்ற பெண்ணுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து தனது ஆசையை மனைவியை, குமார் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடன் துபாய்க்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதனிடையே கடந்த ஏப்ரல் 13ம் தேதி காலை உணவை முடித்து விட்டு குமார் வேலைக்குச் சென்றுள்ளார். காலை 10 மணி அளவில் குமார் வேலை பார்க்கும் நிறுவனத்திலிருந்து வந்த காவலாளி ஒருவர், உங்களுடைய கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கொல்லம்மாவிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டு நொறுங்கிப் போன அவர், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். ஆனால் கணவரைப் பார்க்க மருத்துவமனை அனுமதிக்கவில்லை. பிறகு சிறிது நேரம் கழித்து கணவர் இறந்து விட்டதாகக் கூறியுள்ளார்கள்.
வாழ்க்கையில் மொத்தமும் அவர் தான் என நம்பி இருந்த நிலையில், கணவரின் திடீர் மரணம் கொல்லம்மாவை நிலைகுலையச் செய்துள்ளது. இதற்கிடையே துபாயிலிருந்து வந்த சிறப்பு விமானம் மூலம், 182 தமிழர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1 மணி அளவில் சென்னை திரும்பினர். இவர்களில் ஒருவராகக் கணவரின் உடலோடு கொல்லம்மா சென்னை திரும்பியுள்ளார்.
இதனிடையே கணவரின் உடலைச் சென்னை கொண்டு வந்தது குறித்து கண்ணீருடன் கூறிய கொல்லம்மா, ''இதுவரை எங்குமே நான் தனியாகச் சென்றது இல்லை. இன்று வாழ்க்கையிலேயே என்னைத் தனியாகவிட்டு விட்டுச் சென்றுவிட்டார். அவரது உடலை மீண்டும் வீட்டுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஒன்றுக்காக மட்டுமே இன்னும் நான் உயிரோடு இருக்கிறேன்.
என்னுடைய வேதனை எந்த மனைவிக்கும் வரக் கூடாது'' எனக் கண்ணீருடன் கூறினார். காலம் சில நேரங்களில் தனது மோசமான முகத்தைக் காட்டி விடுகிறது என்பதே நிதர்சனமான உண்மை.