இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 'பூஜ்ஜியமாக' இருக்கும்!.. அதிரவைக்கும் ரிப்போர்ட்!.. என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > இந்தியாஅதிகமான நிதிப் பற்றாக்குறை, அதிகரிக்கும் அரசின் கடன், சமூகத் திட்டங்களுக்குக் குறைவான பங்களிப்பு, வலுவில்லாத கட்டமைப்பு, நிதித்துறையின் தேக்கம் போன்றவற்றால் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பூஜ்ஜியமாக இருக்கும் என்று சர்வதேச தர நிறுவனமான மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ் அமைப்பு இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
''வேலையின்மை அதிகரிப்பு, புதிய வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் மந்தம், உற்பத்திக் குறைவு, கிராமப்புற குடும்பங்களில் பணப் பற்றாக்குறை, நிதிச்சிக்கல் போன்றவற்றால் கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் தரம் குறைந்து வந்தது.
நடப்பு நிதியாண்டைக் கணக்கிடும்போது கொரோனா வைரஸைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் உற்பத்தித்துறை, சேவைத்துறை முடங்கி, பொருளாதாரச் செயல்பாடு ஸ்தம்பித்துள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு நிதியாண்டில் பூஜ்ஜியமாக இருக்கும். ஆனால், 2012-22ம் ஆண்டில் 6.6 சதவீதமாக அதிகரிக்கும்.
கொரோனா வைரஸால் வந்த லாக்டவுன் பொருளாதார வளர்ச்சியி்ல ஏற்கெனவே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது நாட்டின் நிதிச்சூழலில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த கொரோனா வைரஸால் மிகப்பெரிய பொருளாதாரப் பாதிப்பு ஏற்படும்.
வேலையின்மை அதிகரிப்பு, புதிய வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் மந்தம், உற்பத்திக் குறைவு, கிராமப்புற குடும்பங்களில் பணப் பற்றாக்குறை, நிதிச் சிக்கல் போன்றவை வரும் காலத்தில் அரசுக்குப் பெரும் சவாலாக இருக்கும்.
கொரோனா வைரஸால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு ஒருபக்கம் இருந்தாலும், ஏற்கெனவே இருந்த பொருளாதாரப் பிரச்சினைகளை, நிறுவனங்களின் பலவீனத்தை அடையாளம் கண்டு அதை நிவர்த்தி செய்ய அரசின் கொள்கைகள் வலுவாக இல்லாதது பொருளாதாரச் சரிவுக்கும், அரசின் கடன் அதிகரிப்புக்கும் காரணம்.
கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதாரச் சீர்குலைவு, நிதிக் கொள்கை போன்றவற்றால் நடப்பு நிதியாண்டில் இந்திய அரசால் நிதிப் பற்றாக்குறையை 3.5 சதவீதத்துக்குள் அடக்க முடியாது. பொருளாதார ஊக்குவிப்பு சலுகைகள், வருவாய்க் குறைவு போன்றவற்றால் நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை 5.5 சதவீதம் வரை அதிகரிக்கலாம்''.
இவ்வாறு மூடிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
