‘கோயம்பேடு மார்க்கெட்டால்’.... ‘இந்த 5 மாவட்டங்களில்’... ‘மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ள கொரோனா’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோயம்பேடு மார்க்கெட் தொழிலாளர்கள் வருகையால், தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கொரோனா மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

குறிப்பாக திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்கள் கொரோனாவின் பிடியில் இருந்து விலகி பச்சை மண்டலத்திற்குள் நுழையும் தருவாயில் இருந்தது. இந்நிலையில் கோயம்பேட்டில் இருந்து வருகை புரிந்த தொழிலாளர்களால் 5 மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் 4 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று இருந்த நிலையில், கோயம்பேடு தொழிலாளர்கள் வருகைக்கு பிறகு பாதிப்பு எண்ணிக்கை நேற்று முன் தினம் 240 ஆக உயர்ந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. திருச்சியில் கோயம்பேட்டில் இருந்துவந்த 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல், புதுக்கோட்டை மற்றும் கரூரிலும் புதிதாக தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொரோனா குறைந்ததால் 5 மாவட்ட பொதுமக்களும் கடந்த வாரம் சற்று மனநிம்மதி அடைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் தொற்று பரவ தொடங்கியுள்ளது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. பச்சை மண்டலமாக மாற இருந்த நிலையில் கைக்கு வந்தது வாய்க்கு எட்டாமல் போய் விட்டதே என்று எண்ணி கவலையடைந்துள்ளதுடன், பச்சை மண்டலத்திற்கு எப்போது மாறுமோ என்று ஏங்கி தவித்து வருகின்றனர்.
