‘போட்டிக்கு 200 ரூபாயில் இருந்து இந்திய அணி வரை..’ பிரபல ஐபிஎல் பௌலரின் அசத்தல் பயணம்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Jul 22, 2019 04:49 PM
ஐபிஎல் தொடர்களில் கலக்கிய ஹரியானாவைச் சேர்ந்த நவ்தீப் சைனி வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பை தோல்வியைத் தொடர்ந்து ஏற்பட்ட பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட ஒரு நாள் மற்றும் டி20 போட்டிக்கான அணியில் நவ்தீப் சைனி புதுமுக பௌலராகச் சேர்க்கப்பட்டுள்ளனர். ஹரியானாவைச் சேர்ந்த இவர் இதுவரை 13 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கடந்த உலகக் கோப்பையில் இந்திய அணி வலைப் பயிற்சி மேற்கொள்ள பிசிசிஐ தேர்வு செய்த பௌலர்களில் முக்கியமானவராகவும் நவ்தீப் சைனி இருந்துள்ளார்.
இவர் இதுவரை டெல்லி, இந்தியா ஏ, டெல்லி கேப்பிடல்ஸ், இந்தியா கிரீன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ரெஸ்ட் ஆஃப் இந்தியா, இந்தியா பி, இந்தியா சி ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். 2013ஆம் ஆண்டு வரை இவர் பெரும்பாலும் டென்னிஸ் பந்தில் விளையாடும் போட்டிகளிலேயே ஆடியுள்ளார். உள்ளூரில் ஒரு போட்டிக்கு 200 ரூபாய் பெற்று விளையாடி வந்த நவ்தீப் சைனி தன்னுடைய திறமையால் தற்போது இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரைக் கண்டுபிடித்து ஊக்கப்படுத்தியதில் மிக முக்கியமானவர் முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் ஆவார்.
முன்னதாக கம்பீர் பற்றிப் பேசிய நவ்தீப், “என்னுடைய குடும்பத்திற்கு அடுத்து கவுதம் பையா தான். நான் எங்கேயோ விளையாடிக் கொண்டிருந்தேன். ஹரியானாவில் கூட யாருக்கும் என்னைத் தெரியாது. கவுதம் பையா தான் என்னை அழைத்து வந்து டெல்லி அணிக்காக விளையாட வைத்தார். என்னுடைய திறமைகளில் அதிக நம்பிக்கை வைத்த அவரை நான் வாழ்நாளில் மறக்க மாட்டேன்” எனக் கூறியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
