'பைனல்'ல இது தான் நடந்துச்சு'... 'ஆனா அதுக்காக 'துக்கப்படல, துயரப்படல'... சஸ்பென்ஸ் உடைத்த நடுவர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Jeno | Jul 22, 2019 09:29 AM
உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது நடுவர் குமார் தர்மசேனா, ஓவர் த்ரோவிற்கு கொடுத்த 6 ரன்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. அதுகுறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணி முதன்முறையாக உலக கோப்பையை வென்று, தனது பல வருட கனவை நனவாக்கியது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போட்டியின் கடைசி ஓவர் ஆட்டத்தின் போக்கையே மாறியது.
கடைசி ஓவரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஓவரின் 4-வது பந்தை பவுண்டரிக்கு அடித்த பென் ஸ்டோக்ஸ் 2 ரன்கள் ஓட முயற்சித்தார். அப்போது நியூசிலாந்து வீரர் கப்தில், ரன் அவுட் செய்யும் நோக்கத்துடன் பந்தை விக்கெட் கீப்பருக்கு த்ரோ செய்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக பந்து ஸ்டோக்ஸின் பேட்டில் உரசி பவுண்டரிக்கு சென்றது.
இதையடுத்து நடுவர் குமார் தர்மசேனா 6 ரன்கள் கொடுத்தார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. பலரும் நடுவரின் முடிவை கடுமையாக கண்டித்தார்கள். முக்கியமான போட்டியின் இறுதி நேரத்தில் நடுவர்கள் இதுபோன்று செயல்படுவது, அவர்கள் மீதான நம்பகத்தன்மையை கேள்விக் குறியாக்குவதாக பலரும் வேதனை தெரிவித்திருந்தார்கள்.
இதனிடையே இந்த சர்ச்சை குறித்து முதல் முறையாக குமார் தர்மசேனா தனது கருத்தை தெரிவித்துள்ளார். ''டிவி ரிப்ளேவில் பார்க்கும் போது தான், நான் எடுத்த முடிவு தவறு என்பதை உணர்ந்து கொண்டேன். ஆனால் அதற்காக நான் ஒன்றும் வருத்தப்படவில்லை.
நான் அந்த முடிவை எடுக்கும் முன்பு, களத்தில் இருந்த மற்ற நடுவர்களுடன் கலந்து ஆலோசனை செய்தேன். அந்த நேரத்தில் என்னால் டிவி ரிப்ளேவில் பார்க்க முடியாதுன் என்பதால், நடுவர்களுடன் ஆலோசித்து அவர்கள் எல்லைக்கோட்டை கடந்ததாக கூறிய பின்பே 6 ரன்கள் கொடுத்தேன்’ என குமார் தர்மசேனா தெரிவித்துள்ளார்.