‘விதியை மீறி குடும்பத்தை தங்க வைத்ததாகப் புகார்'... 'மூத்த வீரர் மீது நடவடிக்கை எடுக்க திட்டம்???'
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Jul 21, 2019 12:09 PM
உலகக்கோப்பை தொடரில் மூத்த இந்திய வீரர் ஒருவர், பிசிசிஐ விதிக்கு மாறாக, அதிக நாட்கள் தனத குடும்பத்தை தங்க வைத்தார் எனப் புகார் எழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியின் போது, இந்திய வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் 15 நாட்கள் தங்கிக்கொள்ள, கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி அனுமதி வழங்கியது. ஆனால் அதையும் மீறி மூத்த வீரர் ஒருவர் உலகக் கோப்பை போட்டி நடந்த 7 வார காலமும், தனது மனைவியை தன்னுடன் தங்க வைத்திருந்த விஷயம் தற்போது தெரியவந்துள்ளது.
மனைவி தன்னுடன் கூடுதல் நாட்கள் தங்குவதற்கு, அவர் கேப்டன் அல்லது பயிற்சியாளர் யாருடைய அனுமதியையும் பெறவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. கிரிக்கெட் வாரியத்தின் குறிப்பிட்ட இந்த விதிமுறையை மீறிய அவர் மீது, நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. இது தொடர்பாக அணியின் நிர்வாக மேலாளர் சுனில் சுப்ரமணியத்திடம் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளது.
அந்த மூத்த வீரர் யார் என்பது குறித்து இதுவரை நேரடியாக தெரிவிக்கப்படவில்லை. உலகக் கோப்பை தோல்வி தொடர்பாக ஏற்கனவே விசாரணை நடத்த பிசிசிஐ நிர்வாகக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், தற்போது இந்த விவகாரமும் சேர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.