‘ஐசிசி-யை விளாசித் தள்ளிய இந்திய அணியின் முன்னாள் வீரர்கள்..’ ட்விட்டரில் ட்ரெண்டாகும் #ICCRULES..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jul 15, 2019 05:35 PM

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், அதிக பவுண்டரிகளை வைத்து இங்கிலாந்து வெற்றி பெற்றதாகத் தீர்மானித்ததற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

Former cricketers and fans slam ICC for boundary count rule

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய இரு அணிகளும் 241 ரன்கள் எடுத்ததால் போட்டி ட்ரா ஆனது. பின்னர் சூப்பர் ஓவர் வீசப்பட அதுவும் ட்ராவில் முடிந்தது. இதனால் அதிக பவுண்டரிகள் அடித்த  அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இவ்வாறு வெற்றி பெற்ற அணியைத் தேர்வு செய்ததற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப், “இந்த அதிக பவுண்டரி விதியை ஜீரணிப்பது கடினமானது. மீண்டும் ஒரு சூப்பர் ஓவரை நடத்தி ஏதாவது ஒரு அணியை வெற்றி பெற வைத்திருக்கலாம். அதிக பவுண்டரிகள் அடிப்படையில் வெற்றியைத் தீர்மானிப்பதை விட, கோப்பையைப் பகிர்ந்துகொள்வது சிறப்பாக இருந்திருக்கும். இது நியூசிலாந்து அணிக்கு கடினமானது” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும், பாஜக எம்.பியுமான கவுதம் கம்பீர், “என்னால் இதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. உலகக் கோப்பை இறுதிப் போட்டி பவுண்டரிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் அபத்தமாக உள்ளது. இது டையாகவே இருந்திருக்கலாம். இரு அணிகளுக்கும் வாழ்த்துக்கள். இருவருமே வெற்றியாளர்கள்தான்” எனப் பதிவிட்டுள்ளார்.

 

 

 

இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், “இந்த விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனினும் விதிமுறைகள் விதிமுறைகள்தான். உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள். ஆனாலும் எனது இதயம் நியூசிலாந்து அணியின் பக்கம்தான் செல்கிறது. மிகச் சிறப்பான ஃபைனல்” எனக் கூறியுள்ளார்.

 

 

 

 

இதைத்தொடர்ந்து ட்விட்டரில் ICCRules என்ற ஹேஷ்டேக்தான் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து வெற்றியைக் குறைத்து சொல்லவில்லை. ஆனால் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் விதமாக புதிய விதிமுறைகள் வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாகவும் உள்ளது.

Tags : #ICCWORLDCUP2019 #ICCRULES #NZVSENG