'இந்திய அணியின் மிடில் ஆர்டர் சொதப்பல்'... 'விளாசிய முன்னாள் நட்சத்திர வீரர்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Jul 15, 2019 09:27 AM
நான்காம் நிலை பேட்ஸ்மேன் இடத்துக்கு அணி நிர்வாகம், சரியாக திட்டமிடவில்லை என முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் சாடியுள்ளார்.

உலகக் கோப்பை அரையிறுதியில், நியூசிலாந்துடன் 18 ரன்கள் வித்தியாசத்தில், இந்திய அணி தோல்வியடைந்தது. நான்காம் நிலை பேட்ஸ்மேன் இடத்தில் எந்த வீரரும் நிலைத்து ஆடாததால், கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஓராண்டாக பல்வேறு வீரர்கள் மாற்றப்பட்டும், அவர்களுக்கு உரிய நம்பிக்கை தரப்படவில்லை. இந்நிலையில் முன்பு இந்திய அணியில், நான்காம் நிலை பேட்ஸ்மேனாக களமிறங்கி, 2 உலகக் கோப்பை போட்டிகளில் வெல்ல உதவிய, யுவராஜ் சிங் ஆங்கில இதழுக்கு பேட்டியளித்துள்ளார்.
அதில், ‘முக்கியமான இந்த பேட்டிங் இடத்தை நிரப்ப அணி நிர்வாகம் சரிவர செயல்படவில்லை. உலகக் கோப்பையை மனதில்வைத்து, நான்காம் வரிசை வீரரை உறுதி செய்திருக்க வேண்டும். 4-ம் வரிசை மிகவும் முக்கியமானது. அந்த வரிசையில் ஆடும் வீரர் ஒரு சில இன்னிங்ஸ்களில் சொதப்பிவிட்டால், அவரை புறக்கணிக்கக்கூடாது. அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டியது அவசியம். நீங்கள் தான் நான்காம் வரிசையில் இறங்கப்போகிறீர்கள். எனவே கவனமாக ஆடுங்கள் என்று நம்பிக்கையளித்திருக்க வேண்டும். ஆனால் அதையெல்லாம் செய்யாமல் அம்பதி ராயுடுவை நீக்கிவிட்டார்கள்.
அம்பதி ராயுடு நியூசிலாந்துக்கு எதிரான தொடர் வரை, தொடர்ந்து அணியில் எடுக்கப்பட்டு, நன்றாகத்தானே ஆடினார். ஆனால் அவரை கடைசி நேரத்தில் புறக்கணித்துவிட்டார்கள். பின் ரிஷப் பந்த்தையும் தேர்வு செய்து நீக்கிவிட்டனர். எல்லாருக்கும் ஒருசில மோசமான இன்னிங்ஸ்கள் அமையத்தான் செய்யும். அதற்காகவெல்லாம் புறக்கணிக்கக்கூடாது. ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் அவுட்டாகிவிட்டால், இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை சரித்துவிடலாம் என்பது தெரிந்து, எதிரணிகள் செயல்பட்டார்கள். இனிவரும் காலங்களில் நமக்கு நிரந்தரமான சிறந்த நான்காம் வரிசை வீரர் ஒருவர் தேவை. அதற்கு அணி நிர்வாகம் என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை’ என யுவராஜ் சிங் தெரிவித்தார்.
