"20 கோடில ஒருத்தருக்கு தான் இப்படி ஒரு அதிசயம் நடக்கும்".. ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து மிரண்டுபோன டாக்டர்.. துள்ளிக்குதித்த அப்பா..!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை (Identical Triplets) பெற்றெடுத்துள்ளார்.

இளம் தம்பதி
இங்கிலாந்தின் நாட்டிங்காம் பகுதியை சேர்ந்தவர் சாரா அமிராபாடி. 28 வயதான இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரே மாதிரியான 3 பெண் குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார். இவருடைய வருங்கால கணவர் அஷ்ரப் ரீட் (29) இதனால் சந்தோஷத்தின் உச்சிக்கே சென்றுள்ளார். சாரா மற்றும் அஷ்ரப் ஆகிய இருவரது வீட்டிலும் இரட்டையர்கள் இருக்கிறார்கள். ஆகவே தனக்கும் இரட்டை குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது என நினைத்திருக்கிறார் சாரா. ஆனால், ஸ்கேன் எடுத்தபோதுதான் ஆச்சர்யமளிக்கும் உண்மை தெரியவந்திருக்கிறது.
ஷாக்-ஆன டாக்டர்
சாராவை 12 வது வாரத்தில் எடுக்கப்பட வேண்டிய ஸ்கேனுக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் அஷ்ரப். இதுபற்றி பேசிய சாரா,"ஸ்கேன் எடுக்கச் செல்லும்போது ஒருவேளை நமக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கலாம் என அஷ்ரப் சொன்னார். ஆனால், மருத்துவர்கள் எங்களுக்கு கூடுதலான அதிர்ச்சியை அளித்தார்கள்" என்றார்.
ஸ்கேன் செய்யும்போது தன்னுடைய மனவோட்டம் குறித்து பேசிய சாரா," டாக்டர் ஸ்கேன் செய்ய ஆரம்பித்துவிட்டு, உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கக்கூடிய ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்றார். என் மனம் உடனடியாக கவலையடைந்தது. ஒருவேளை இதயத்துடிப்பு இல்லையோ அல்லது அப்படி ஏதாவது இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அது ட்ரிப்லெட்ஸ் என்று அவர் சொன்னபோது, எங்களால் நம்பவே முடியவில்லை. எங்களுக்கு அழுகையே வந்துவிட்டது. ஸ்கேன் திரையை கூட பார்க்காமல் சிரித்தபடியே அழுதேன்" என்றார்.
20 கோடியில் ஒருவர்
சாரா ஸ்கேன் செய்தபிறகு கூடுதல் கவனத்துடன் செயல்பட்டிருக்கிறார். 17 வது வாரத்தில் ஸ்கேன் எடுத்தபோது சாரா மூன்று பெண் குழந்தைகளுக்கு தாயாகப்போகிறார் என்பதை மருத்துவர் உறுதிப்படுத்தியுள்ளார். சிசேரியன் மூலமாக சாராவுக்கு குழந்தைப்பேறு நடைபெற்றிருக்கிறது. உலகில் 20 கோடி பேரில் ஒருவருக்கு மட்டுமே இப்படி ஒரே மாதிரியான மூன்று குழந்தைகள் பிறக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
சாரா - அஷ்ரப் தம்பதி தங்களது மூன்று மகள்களுக்கும் ரோயா, அதீனா மற்றும் செஃபியா எனப் பெயர் சூட்டியுள்ளனர். தற்போது மூன்று குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாகவும், சாராவின் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் குழந்தைகளை வளர்க்க தங்களுக்கு உதவிவருவதாகவும் மகிழ்ச்சியுடன் கூறுகிறார் அஷ்ரப்.

மற்ற செய்திகள்
