'இறந்து 5 மணி நேரம்' அநாதையாக கிடந்த 'சடலம்'!.. 'கொரோனா அச்சத்தால்' சென்னை நபருக்கு 'நேர்ந்த பரிதாபம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 30, 2020 07:16 PM

சென்னை ஜாபர்கான்பேட்டையில் குடியிருந்தவர் 53 வயதான ரவி. திருமணம் ஆகாத ரவி, தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்தபடி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

chennai old man found after 5 hours from his death amid Covid19

இதனால் இவருக்கு கடந்த சில தினங்களாக இருமல் மற்றும் காய்ச்சல் இருந்து வந்தது. இதனால் அவதிப்பட்ட ரவியை அவரது வீட்டு உரிமையாளர் வீட்டுக்குள் அனுமதிக்க கூடாது என்று கூறியதால், அவரது சகோதரி ரவியை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் தங்குவதற்கு வீடு இல்லாத ரவி ஜாபர்கான் பேட்டை பகுதியில் உள்ள தெருவிலேயே தங்கியதாகவும், காய்ச்சல் அதிகமானதால் கொரோனா பயம் காரணமாக சென்னை அரசு மருத்துவமனைக்கு சென்றபோது அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

பின்னர் அவர் மருத்துவமனையிலிருந்து ஜாபர்கான்பேட்டை பகுதிக்கு திரும்பி வந்தார். ஆனாலும் அவரது சகோதரி, வீட்டில் தங்குவதற்கு அனுமதி அளிக்காததால், ஆள் நடமாட்டமில்லாத தெருவிலேயே படுத்துறங்கியுள்ளார். ஆனால் நள்ளிரவில் காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட்ட ரவியின் உயிர் பிரிந்துள்ளது. ஆனால் ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டம் இல்லாததால் ரவி இறந்த தகவல் யாருக்கும் தெரியவில்லை. இந்த சமயத்தில் நீண்ட நேரமாக ஒருவர் அசைவற்று கிடப்பதை பார்த்த சிலர் அப்பகுதி காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க, போலீஸார் விரைந்து வந்து ரவியின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே ரவிக்கு கொரோனா தொற்று இல்லை என்பதையும் மருத்துவர்கள் உறுதி செய்தனர. இதனை அடுத்து போலீஸாரும் ரவியின் உறவினர்களும் அவருக்கு இறுதி அஞ்சலி செய்ய ஏற்பாடு செய்தனர். மேலும் ரவி எதற்காக வீட்டில் தங்காமல் தெருவில் படுத்திருந்தார் என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். உண்மையிலேயே கொரோன அச்சம் காரணமாகத்தான், தெருவில் இறந்து கிடந்த ரவியின் சடலம் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக, யாரும் நெருங்காத வகையில் அநாதையாக கிடந்துள்ளதாகவும் அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.