'கொரோனா' கோரத்தால் கோஸ்ட் சிட்டியான 'நியூயார்க்'... 21ஆம் நூற்றாண்டின் 'ஹிரோஷிமா, நாகசாகி..'. 'நினைவு நகராக' மாறி வரும் 'கனவு நகரம்...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Apr 16, 2020 11:38 AM

வாழ்நாளில் ஒருமுறையாவது சென்றுவிட மாட்டோமா? என பலரை கனவு காண வைத்த நியூயார்க் நகரை அந்நாட்டு மக்களே கோஸ்ட் சிட்டி என அழைக்கத் தொடங்கி விட்டனர். 

The people of New York City have started calling it Ghost City

உலகின் அசைக்க முடியாத வல்லரசு நாடாக திகழ்ந்து வந்த அமெரிக்காவை ஒரு வைரஸ் உருக்குலைத்து போட்டு விட்டது.

82 நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தென்பட்டது. அப்போதே அந்நாடு உஷாராகி இருக்க வேண்டும். கூட்டங்களுக்கு தடை விதிக்கப்படவில்லை. வர்த்தக மையங்கள், சுற்றுலா தலங்கள் எதுவும் மூடப்படவில்லை. தடையின்றி விமானங்கள் எல்லை தாண்டி பறந்தன. நிலைமை மோசமான பிறகே முழு ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. விளைவு, 82 நாட்களில் கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை கடந்துவிட்டது. மரணம் 25 ஆயிரத்தை தொட்டுவிட்டது. உலகத்தில் அதிக பாதிப்பு, மரணங்கள் ஏற்பட்ட நாடுகள் பட்டியலில் அசைக்க முடியாத இடத்தை அமெரிக்கா தனதாக்கிவிட்டது.

அந்நாட்டில் தினமும் 2 முதல் 3 ஆயிரம் பேர் வரை மரணத்தை தழுவுகின்றனர். லேட்டாக விழித்துக் கொண்ட  அமெரிக்கா, தனது மக்களை பாதுகாக்க மருத்தவ நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. வேறு எந்த துறைக்கும் செய்த செலவை விட சுகாதாரத்துறைக்கு தற்போது கோடிக் கணக்கில் செலவழித்து வருகிறது. தற்போதுவரை 32 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. எப்படியாவது கொரோனாவிற்கு எதிரான போரில் வென்றுவிட அந்நாடு போராடுகிறது.

இவ்வளவு போராட்டங்களுக்கும் நடுவில் சுமார் 6 லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு விட்டனர். வைரஸ் தாக்கத்தின் வேகம் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை அந்நாட்டில் 43,500 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர் என்பது ஒன்று தான் இப்போதைக்கு ஆறுதல்.

ஒட்டு மொத்த  அமெரிக்காவில் கொரோனாவின் கொடுமைக்கு முழுமையாக இறையாகிய நகரம் என்றால் நியூயார்க் நகரைத் தான் சொல்ல வேண்டும். . உலகிற்கே வர்த்தக தலைநகராக விளங்கிய நியூயார்க், வைரஸ் தாக்குதலில் முற்றிலும் நிலைகுலைந்துவிட்டது. தூங்கா நகரம் என பெயர் பெற்ற அந்த நகரம் தற்போது இருண்டு, துவண்டு போய் உள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் ஏற்பட்ட மரணங்களில் பாதிக்குமேல் நியூயார்க்கில் தான் ஏற்பட்டுள்ளது.

நிகழும் மரணங்களில் மூன்றில் இரண்டு பங்கு இங்கு தான். தினமும் 1500 முதல் 2 ஆயிரம் பேர் வரை இறக்கின்றனர். அங்கு மக்கள் கொத்து கொத்தாய் செத்து விழுகின்றனர். தனித்தனியாய் புதைக்கக்கூட இடம் இல்லை. இறுதிச் சடங்கில் பங்கேற்க நாதி இல்லை. இயந்திரங்கள் தோண்டிய பள்ளங்களில் பிணங்களை குவியல் குவியலாய் மூழ்கடிக்கிறது அந்நாட்டு அரசு.

வாழ்வில் ஒரு முறையாவது அங்கு சென்று வந்துவிட வேண்டும் என நினைக்கும் அளவுக்கு பொருளாதாரத்தின் உச்சத்தில் இருந்த அந்நகரை, கொரோனா மரண ஓலம் திகிலில் உறைய செய்துள்ளது. அந்நாட்டு மக்களே நியூயார்க்கை கோஸ்ட் சிட்டி' (ஆவிகளின் நகர்) என அழைக்க துவங்கிவிட்டனர்.