‘ஏன் சார் இத்தன நாளா பேட்டி தரல..?’.. கேள்வி எழுப்பிய நிருபர்.. அமைச்சர் விஜயபாஸ்கர் சொன்ன பதில்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Apr 16, 2020 01:02 PM

சில நாள்களாக ஏன் பேட்டி தரவில்லை என பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிருபர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

Minister VijayaBaskar latest press meet coronavirus update

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துடிப்புடன் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், வைரஸ் பாதித்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை தினமும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்து வந்தார். ஆனால் சில தினங்களாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு வந்தார். சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷும் உடனிருந்தார். அப்போது இத்தனை நாள்களாக ஏன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை? என்ன காரணம்? என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர்,‘நான் நேற்றுகூட செய்தியாளர்களை சந்தித்தேன். அதற்கு முன்தினமும் சந்தித்தேன். முதல்வர் உத்தரவுப்படி அமைச்சர் என்ற முறையில் பல்வேறு மருத்துவமனைகளுக்கு ஆய்வுக்கு செல்வது, ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொள்ளவது போன்ற பணிகளில் கவனம் செலுத்தி வருகிறேன். கொரோனா குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை அரசு செயலாளர் வழங்குகிறார். தேவைப்பட்டால் தலைமை செயலாளர் வங்கிறார். முதல்வரும் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து வருகிறார். இதில் வேறு எந்த சிந்தனைக்கும் இடமில்லை’ என விளக்கம் அளித்தார்.