'கொரோனாவால்' ஸ்தம்பித்த 'விளையாட்டு' உலகம்... 'ஒரு நாடு மட்டும்' கொரோனாவுக்கே 'விளையாட்டு' காட்டுகிறது... 'அலட்டிக்' கொள்ளாமல் 'பிரிமீயர் லீக்' போட்டியை நடத்தும் 'நாடு'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Apr 16, 2020 07:35 PM

கொரோனாவின் கோரத்தாண்டவத்தில் மொத்த விளையாட்டு உலகமும் ஸ்தம்பித்துக் கிடக்கும் இந்த வேளையில், எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் பெலாரஸ் பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள் மட்டும் நடைபெற்றுக் கொண்டிருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

In the corona fear Only one country hosts football matches

கொரோனா ஐரோப்பாவில் பரவத் தொடங்கிய காலகட்டத்திலேயே, பிரீமியர் லீக், லா லிகா, சீரி ஏ போன்ற முக்கிய லீக்குகளை அந்தந்த நாட்டின் கால்பந்து சங்கங்கள் நிறுத்தி வைத்தன. யூரோ கோப்பை ஒரு வருடம் தள்ளிப்போனது. பெல்ஜியம் கால்பந்து சங்கம் லீக்கை இப்போதே முடித்து வெற்றியாளரை அறிவித்துவிட்டது. இந்த நிலையில் எந்தக் காரணத்துக்காகவும் சீஸனைத் தொடரக்கூடாது என்பதில் முன்னணி அமைப்புகள் தீர்க்கமாக இருக்கின்றன.

இப்படி மொத்த கால்பந்து உலகமுமே விழிபிதுங்கிக் கிடக்கிறது. ஆனால், மொத்த ஐரோப்பாவுக்கும் விதிவிலக்காக பெலாரஸ் நாடு மட்டும் போட்டிகளை தொடர்ந்து நடத்திக்கொண்டே இருக்கிறது.

இப்போது 100 ரசிகர்கள்கூட ஆட்டத்தைக் காணச் செல்வதில்லை என்றாலும், சளைக்காமல் போட்டியை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். எந்த கால்பந்துப் போட்டியும் நடக்காத காரணத்தால், இப்போது இந்தத் தொடரின் மீது உலகம் முழுக்க இருக்கும் கால்பந்து ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது.

நடப்பு பெலாரஸ் லீக் சாம்பியனான டைனமோ பிரஸ்ட் அணி, இந்தப் பப்ளிசிட்டியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. அதற்காக புதுமையான ஒரு திட்டத்தையும் கையாண்டுகொண்டிருக்கிறார்கள். ரசிகர்களை கவர்வதற்காக ஆன்லைனில் டிக்கெட் வாங்கும் ரசிகர்களின் முகங்களின் புகைப்படம் ஒட்டப்பட்டு, அவை மைதானத்தில் அமர்ந்திருப்பதுபோல் செட் அப் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலும் ரசிகர்கள் நேரடியாக மைதானத்திற்கு வராவிட்டாலும் அவர்கள் கலந்துகொண்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த யுக்தி உலக ரசிகர்களின் கவனத்தை சற்று ஈர்த்திருப்பதால், அனைத்து நாட்டு கிளப்களின் ஜெர்சிக்களையும் அந்த டம்மிக்களுக்கு அணிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆட்டத்தை நேரில் பார்க்க விருப்பமில்லையென்றாலும் தங்களின் முகம் மைதானத்தில் இருக்குமென்பதால் ரசிகர்களும் சந்தோஷமாக ஆன்லைனில் டிக்கெட் வாங்குகிறார்கள். அதனால், இப்போது டிக்கெட் விற்பனை சற்று அதிகரித்திருக்கிறது.

பெலாரசில் கடந்த 25 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் அதிபர் அலெக்சாண்டர் லுகசென்கோ தங்கள் நாட்டில் இதுவரை ஒருவர் கூட கொரோனாவால் உயிரிழக்க வில்லை என தெரிவித்து வருகிறார். ஆனால் அங்கு  3,281 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், 33 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.