இந்த மாதிரி ஒரு ‘அதிபரை’ நாங்க பார்த்ததே இல்ல.. முன்னும் பின்னும் ‘சூழ்ந்த’ கார்கள்.. பரபரப்பை கிளப்பிய ‘டிரம்ப்’ பதிவிட்ட வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு போட்டியிரும் ஜோ பிடனின் பிரச்சார வாகனத்தை டிரம்ப் ஆதரவாளர்கள் மறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நாளை (02.11.2020) நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தல், சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.
கடந்த சில தினங்களாக இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். கொரோனா வைரஸ், இனப்பாகுபாடு ஆகிய விவகாரங்கள் இந்த தேர்தலில் முக்கிய பிரச்சினைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன. பிரச்சாரத்தின்போது ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் டெக்சாஸ் மாநிலத்தில் ஜோ பிடனின் பிரச்சார பேருந்தை, டிரம்ப் ஆதரவாளர்களின் வாகனங்கள் முன்னும் பின்னும் சூழ்ந்துகொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டெக்சாஸ் நெடுஞ்சாலையில் டிரம்ப் கொடி தாங்கிய பல டிரக்குகள் ஜோ பிடன் பிரச்சார பேருந்தை சூழ்ந்துகொண்டு சென்றது. இதனால் அந்த பேருந்து மெதுவாக செல்ல நேர்ந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இந்த வீடியோவை டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு ‘ஐ லவ் டெக்சாஸ்’ என்று ஆதரவாளர்களை பாராட்டினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
I LOVE TEXAS! pic.twitter.com/EP7P3AvE8L
— Donald J. Trump (@realDonaldTrump) November 1, 2020
இந்த சம்பவம் குறித்து பேசிய ஜோ பிடன், ‘நாங்கள் இதுபோன்று எப்போதும் செய்ததில்லை. இது ஒரு நல்ல விஷயம் என்று நினைக்கும் ஒரு அதிபரை இதுவரை பார்த்ததில்லை’ என்றார். நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டிரம்ப் ஆதரவாளர்களின் இந்த செயல் மற்றும் அவர்களை ஆதரித்து டிரம்ப் வெளியிட்ட ட்விட்டர் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் இந்த சம்பவம் குறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ (FBI) விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மற்ற செய்திகள்
