'ஒன் டூ ஒன்... இது தான் ஃபைனல்!'.. அமெரிக்க அதிபர் தேர்தலை ஒட்டி... டிரம்ப் - பைடன் இடையே அனல் பறந்த விவாதம்!.. சைக்கிள் கேப்பில் இந்தியாவை வம்புக்கு இழுத்த டிரம்ப்!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில் டிரம்ப் மற்றும் பைடன் இடையேயான கடைசி விவாத நிகழ்ச்சியில் இருவரும் காரசாரமாக மோதிக் கொண்டனர்.
அமெரிக்காவில் நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிபர் தேர்தல் வேட்பாளர்களான குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் இடையேயான நேரடி விவாதம் நாஷ்வில்லில் நடைபெற்றது.
விவாதத்தில் முதலாவதாக கொரோனா பெருந்தொற்றை அமெரிக்கா கையாண்ட விதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த டிரம்ப் கொரோனாவால் குறைந்தது 20 லட்சம் பேர் உயிரிழப்பார்கள் என்று கணிக்கப்பட்ட நிலையில், தாங்கள் இறப்பு விகிதத்தை குறைத்திருப்பதாக தெரிவித்தார்.
இன்னும் சில வாரங்களில் கொரோனாவுக்கு தடுப்பூசி வந்து விடும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார். ஆனால், கொரோனாவை கையாள்வதற்கான எந்தவிதமான திட்டமும் டிரம்பிடம் இல்லை என்று ஜோ பைடன் குற்றம் சாட்டினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் வரியே செலுத்தவில்லை என்றும், கடந்த 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் வெறும் 55,000 ரூபாய் மட்டுமே வரி செலுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. விவாதத்தில் இதனை குறிப்பிட்டு பேசிய பைடன், டிரம்ப் வெளிநாடுகளில் தொழில் நடத்தி வருவதாகவும், சீனாவில் ஹோட்டல்கள் நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.
இதனை மறுத்து பேசிய டிரம்ப் தான் கோடிக்கணக்கில் முன்கூட்டிய வரி செலுத்துவதாக கூறினார். பைடனின் மகன் தான் உக்ரைனில் தொழில் செய்து வருவதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
இதனிடையே, காலநிலை மாற்றம் குறித்த விவாதத்தின் போது பேசிய டிரம்ப், இந்தியாவில் காற்று மாசு அதிகமாக இருப்பதாக குறிப்பிட்டார். சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் காற்றின் தரம் மிகவும் குறைந்திருப்பதாகக் கூறிய டிரம்ப், அமெரிக்காவை ஒருதலைப் பட்சமாக நடத்தியதாலேயே பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதாக கூறினார்.
பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் காரணமாக அமெரிக்காவில் பல நிறுவனங்களால் தொழில் தொடங்க முடியவில்லை என்றும், அதிலிருந்து வெளியேறியதால் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.