‘தன்னுடன் துள்ளிக் குதித்த 4 வயது தம்பி’... ‘இப்போ ஒட்டு மொத்தத்தையும்’... 'சோகத்திலும் இளம் தாயின் நெஞ்சார்ந்த பதிவு'!
முகப்பு > செய்திகள் > உலகம்By Sangeetha | Sep 16, 2019 05:22 PM
அமெரிக்காவில் தன்னுடன் நன்றாக ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்த, தனது 4 வயது சகோதரன் கேன்சரால் பாதிக்கப்பட்டதும், 5 வயது சசோதரியின் மனநிலை குறித்து வெளியான பதிவு ஒன்று நெஞ்சை உலுக்கியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் இளம்தம்பதியான மத்தேயு மற்றும் கைட்லின் பர்க். இவர்களுக்கு 3 குழந்தைகள். இவர்களது வாழ்க்கை நன்றாக சென்றுகொண்டிருந்த நிலையில் தான், அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. இவர்களின் நடுக் குழந்தையான, 4 வயது பெக்கெட் பர்க் என்கிற சிறுவன், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், லுகேமியா (leukemia) என்ற எலும்பு மற்றும் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளான் என்று மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது. இதனால் இளம் தம்பதிகள் செய்வதறியாது சோகத்தில் ஆழ்ந்தனர்.
ஆனால் சிறுனின் சகோதரி ஆப்ரி, தனது தம்பிக்கு செய்யும் விஷயங்கள்தான், தற்போது மனதை கலங்க வைக்கிறது. இதுகுறித்து பெக்கெட்டின் ஃபேஸ்புக் பதிவில் தாய் பதிந்துள்ளவை, ‘குழந்தைகளுக்கான கேன்சர் மொத்தக் குடும்பத்தையும் பாதிக்கும் என யாரும் கூறியிருக்கமாட்டார்கள். கேன்சரால் பொருளாதார பாதிப்பு, உடல் ரீதியிலான பாதிப்பு போன்றவற்றை மட்டும்தான் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் கேன்சர் உள்ள ஒரு குழந்தையை, அதே வீட்டில் உள்ள மற்ற குழந்தைகள் எப்படி எதிர்கொள்ளும். அந்தப் போராட்டம் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
இந்தப் பதிவை பார்ப்பதற்கும், படிப்பதற்கும் சிலருக்குக் கடினமாக இருக்கலாம். 15 மாத இடைவெளியில் பிறந்த என் இரு குழந்தைகளும், சேர்ந்தே விளையாடுவார்கள், சேர்ந்தே பள்ளிக்குச் செல்வார்கள். தற்போது இருவரும் இணைந்தே குளிரான மருத்துவமனையின் அறையில் அமர்ந்துள்ளனர். தன் 4 வயது தம்பி, ஆம்புலன்ஸ் மூலம் ஐசியூ-க்கு அழைத்துச் செல்வதை, என் 5 வயது மகள் ஆப்ரி நேரில் பார்த்தாள். ஐ.சி.யூ-வில் சேர்க்கப்பட்ட அவனுக்கு, ஒரு டஜன் மருத்துவர்கள், தொடர்ந்து ஊசி செலுத்துவதையும், பல மருந்து, மாத்திரைகளை, அவன் உட்கொள்வதையும் பார்த்து செயலற்று நின்றாள். அங்கு என்ன நடக்கிறது என அவளுக்குத் தெரியவில்லை.
ஆனால் தன் தம்பி, சிறந்த நண்பனுக்கு ஏதோ தவறாக நடக்கிறது என்பதை மட்டும் அவள் உணர்ந்திருந்தாள். ஒருமாத தொடர் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து, வீடு திரும்பிய தனது தம்பியால், முன்பு போல் எழுந்து நிற்க முடியவில்லை, விளையாடமுடியவில்லை என்பதை ஆப்ரி பார்த்தாள். ஒரு மாதத்துக்கு முன்னர் வரை துள்ளிக் குதித்து விளையாடிக்கொண்டிருந்த அவளின் தம்பி, தற்போது நோய்வாய்ப்பட்டுள்ளான். தாங்கள் இருவரும் ஒன்றாக விளையாடச் சென்ற பூங்காவுக்குத் தற்போது ஏன் செல்லவில்லை. தம்பி ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை. அவனுக்கு என்ன ஆனது போன்ற எந்தக் கேள்விகளையும் அவள் கேட்கவில்லை.
ஒன்று மட்டும் செய்தாள், அவனுக்குத் துணை நின்றாள். தன் தம்பிக்கு நடக்கும் அனைத்தையும், அவள் தெரிந்துகொள்ள வேண்டும். நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவும் ஒற்றுமையும் தேவை. அவர்களைப் பிற குழந்தைகளிடமிருந்து தொலைவில் வைக்கக் கூடாது. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், அவர்கள் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பார்த்துக்கொள்கிறார்கள். என் குழந்தைகளும் அப்படிதான், பெக்கெட் ஒவ்வொரு முறை வாந்தி எடுக்கும்போது, ஆப்ரி அவனுக்குப் பின்னால் துணை நிற்பாள்.
ஆப்ரி, மொத்த அன்பையும் தன் தம்பிக்குக் கொடுத்தாள். அவனை ஆதரித்தாள். நேரம், காலம் பார்க்காமல் அவனைக் கவனித்துக்கொள்கிறாள். இப்போது அவர்கள் முன்பைவிட நெருக்கமாக உள்ளனர். விளையாட்டுக்கு நடுவில் அவன் வாந்தி எடுக்கும் போது முதுகில் தேய்த்து விடுவது, தூங்கி எழுந்ததும் அவன் அருகில் இருப்பது. இதுதான் குழந்தைகள் கேன்சரின் உண்மையான நிலை. தம்பிக்காக தன் வாழ்வில் நிறைய நேரத்தைத் தியாகம் செய்துள்ளார் ஆப்ரி. குழந்தைகளைக் குழந்தைகளாக இருக்க விடுங்கள். அதுவே இருவருக்கும் சிறந்தது’ என கைட்லின் கூறியுள்ளார்.