‘74 வயதில் இரட்டைக் குழந்தை பெற்ற பெண்’.. ஆச்சரியப்பட வைத்த சம்பவம்..! உலக சாதனைக்கு அங்கீகரிக்க வாய்ப்பு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | Sep 05, 2019 02:30 PM
ஆந்திராவில் வயதான தம்பதிக்கு இரட்டைக் குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி பகுதியில் உள்ள நெலாபார்டிபாடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எர்மாட்டி ராஜா ராவ் (80)- எர்மாட்டி மங்கம்மா (74) தம்பதி. இவர்களுக்கு கடந்த 1962 -ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. ஆனால் பல வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாததால் மன வருத்ததில் இருந்துள்ளனர். அப்போது 55 வயதான பெண் ஒருவர் கருத்தரித்தது தொடர்பாக செய்தி அறிந்து தானும் இதுபோல் கருத்திரிக்க மங்கம்மா முடிவெடுத்துள்ளார்.
இதனை அடுத்து குண்டூரில் உள்ள அஹல்யா என்ற மருத்துவமனைக்கு கடந்த ஆண்டு மங்கம்மா சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் ஐ.வி.எப் ( in Vitro fertilization) என்னும் முறையில் கருத்தரிக்க முடிவு செய்துள்ளனர். மங்கம்மாவுக்கு மாதவிலக்கு நின்று பல வருடங்கள் ஆனதால், செயற்கை முறையில் மாதவிலக்கு வருவதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர். இதனை அடுத்து ஐ.வி.எப் முறையின் மூலம் மங்கம்மாவுக்கு கருத்தரிப்பு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அவருக்கு அறுவைச் சிகிச்சையின் மூலம் இரட்டைக் குழந்தை (பெண்) பிறந்துள்ளது. மங்கம்மாவும், இரு குழந்தைகளும் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 72 வயதில் குழந்தை பெற்று உலக சாதனை படைத்திருந்தார். இந்நிலையில் 74 வயதில் குழந்தை பெற்ற மங்கம்மா, உலக சாதனைக்கு அங்கீகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
