அர்ஜென்டினாவை வீழ்த்திய சவூதி அரேபியா... மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சவூதி அரசர் சல்மான்..!
முகப்பு > செய்திகள் > உலகம்கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினாவை வீழ்த்தி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது சவூதி அரேபியா. இதனையடுத்து இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக விடுமுறையை அறிவித்திருக்கிறார் சவூதி அரேபிய மன்னர் சல்மான்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விளையாட்டு கால்பந்து. சாதாரண போட்டிகளுக்கே மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். இந்நிலையில், மத்திய கிழக்கு நாடான கத்தாரில் இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் கால்பந்து உலகக்கோப்பை நடைபெற்ற நிலையில், தற்போது கத்தாரில் துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்த உலகக்கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் கத்தாரை எதிர்த்து ஈகுவேடார் அணி விளையாடியது. இதில் 2 - 0 என்ற கோல் கணக்கில் ஈகுவேடார் அணி வெற்றிபெற்றது. இதனிடையே இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பலம் பொருந்திய அர்ஜென்டினாவை எதிர்த்து சவூதி அரேபியா களமிறங்கியது.
ஆட்டத்தின் முதல் பாதியில் போட்டி துவங்கிய 10 நிமிடங்களுக்குள் கோல் அடித்து அசத்தினார் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி. இதன்மூலம், 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது அர்ஜென்டினா. ஆனால், ஆட்டம் இரண்டாம் பாதியில் தலைகீழாக மாறியது. 8 வது நிமிடத்தில் சவூதி அரேபியாவின் ஷெரி கோலடிக்க, ரசிகர்கள் ஒருகணம் அதிர்ந்து போயினர்.
இதனை தொடர்ந்து, 53 வது நிமிடத்தில் யாருமே எதிர்பார்க்காத நிலையில் சவூதியின் சலீம் அல் டசாரி கோல் அடித்து ஆட்டத்தை தங்கள் வசமாக்கினார். இறுதிக் கட்டத்தில் அர்ஜென்டினாவில் கோல் அடிக்க முடியாமல் போகவே 2-1 என்ற கோல் கணக்கில் சவூதி அரேபியா இந்த போட்டியில் வெற்றிபெற்றது. உலக கால்பந்து அணிகளின் தரவரிசை பட்டியலில் 3 ஆம் இடத்தில் இருக்கும் அர்ஜென்டினாவை 51-வது இடத்திலிருக்கும் சவூதி அரேபியா வீழ்த்தியது, கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழத்தியுள்ளது.
இந்நிலையில், சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் அர்ஜென்டினாவிற்கு எதிரான சவூதி அரேபியாவின் வெற்றியை கொண்டாடும் விதமாக புதன்கிழமை அன்று விடுமுறையை அளித்திருக்கிறார். இந்த விடுமுறையானது அரசு மற்றும் தனியார் துறைக்கும் மற்றும் அனைத்துவிதமான கல்வி நிலையங்களுக்கும் பொருந்தும் என சவூதி பத்திரிகை முகமை செய்தி வெளியிட்டுள்ளது.