தள்ளுவண்டியில் காய்கறி விற்கும் அம்மா.. உலகக்கோப்பை போட்டியில் தெறிக்கவிட்ட மகள்.. அசராத முயற்சியின் மகத்தான வெற்றி..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகாய்கறி விற்பனை செய்யும் தாயின் மகள் ஜுனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்து வருகிறார். இது பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.
![Daughter vegetable selling women in Junior hockey World Cup Daughter vegetable selling women in Junior hockey World Cup](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/daughter-vegetable-selling-women-in-junior-hockey-world-cup.jpg)
உத்திர பிரதேச மாநிலம், லக்னோ பகுதியில் வசித்து வருகிறது ஹபீஸ் - கெய்சர் ஜஹான் தம்பதி. இவர்களுக்கு மொத்தம் 6 பெண் குழ்நதைகள். முன்னதாக சைக்கிள் ரிக்ஷா ஓட்டிவந்த ஹபீஸ் வயது மூப்பு காரணமாக அந்த பணியை தொடராமல் விட்டுவிட்டு உறவினர் ஒருவரின் உதவியுடன் உள்ளூரில் உள்ள மசூதியில் பணிபுரிகிறார் இப்போது. இவருடைய மனைவி ஜஹான் தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்துவருகிறார். இவருடைய ஐந்தாவது மகள் மும்தாஸ் தான் இப்போது ஜுனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியின் ஸ்டார் பிளேயர்.
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் ஜுனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் கடந்த வெள்ளிக் கிழமை அன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் இந்தியா-தென்கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
வெற்றி
இந்த போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் இந்தியா தென் கொரியாவை வீழ்த்தியது. ஜுனியர் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா முதல் நான்கு இடங்களுக்குள் வருவது வரலாற்றில் இதுவே இரண்டாவது முறையாகும். இந்த ஹாக்கி தொடரில் ஆரம்பத்தில் இருந்தே இந்தியாவின் கை ஓங்க காரணமாக இருந்தவர் மும்தாஸ். 19 வயதான இவர் இந்த தொடரில் 6 கோல்களை அடித்து உள்ளார். நடப்பு தொடரில் அதிக கோல் அடித்த இந்திய வீராங்கனை என்ற பெயரையும் இவர் பெற்றுள்ளார்.
உறுதி
தன்னுடைய மகளின் இந்த சாதனை குறித்து பேசிய தாய் ஜஹான்," என்னுடைய மகள் விளையாடும் போட்டியை காண எனக்கு ஆசை தான். ஆனால், நான் காய்கறி விற்றால் தான் என்னுடைய குடும்பத்தை நடத்தமுடியும். அவள் (மும்தாஸ்) எதிர்காலத்தில் இதுபோன்ற பல வாய்ப்புகளை பெறுவார் என உறுதியாக நம்புகிறேன்" என்றார்.
எங்ககிட்ட எதுவுமே இல்ல
மும்தாஸ் தென்னாப்பிரிக்காவில் எதிரணியை திணறித்துக்கொண்டிருந்த போது, அவருடைய ஐந்து சகோதரிகளும் மொபைல் போன் மூலமாக அதை ஆர்வத்துடன் பார்த்திருக்கிறார்கள். இதுகுறித்து பேசிய மும்தாஸின் மூத்த சகோதரி ஃபாரா," இந்த சூழ்நிலையை எப்படி வெளிப்படுத்துவது என்றே தெரியவில்லை. ஒரு காலத்தில் எங்களிடம் எதுவுமே இல்லை. ஏன் உங்களது வீட்டுப் பெண்ணை விளையாட அனுமதித்தீர்கள்? என பலரும் கேட்டார்கள்" எனக் கூறினார்.
திறமை
தன்னுடைய மகள் குறித்து பேசிய ஜஹான்," என் மகள் விளையாடுவது குறித்து பலரும் விமர்சித்திருக்கிறார்கள். ஆனால், நாங்கள் எந்த பதிலையும் கூறுவதில்லை இப்போது அவளே அவளது திறமையின் மூலமாக அந்த கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்" என்றார்.
வறுமை காரணமாக, ஹாக்கி கிட் வாங்க முடியாமல் கஷ்டப்பட்ட நேரத்தில் மும்தாஸின் பயிற்சியாளர் உதவி செய்ததாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் ஃபாரா. இதன் இடையே அரையிறுதி போட்டியில் பலம் வாய்ந்த நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது இந்தியா. இதில் மும்தாஸ் சிறப்பாக விளையாடவேண்டும் என்பதே பலரது விருப்பமாக இருக்கிறது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)