டி20 உலகக் கோப்பை கதி என்ன?.. ஐசிசி சரமாரி கேள்வி!.. வாய்தா வாங்கிய பிசிசிஐ!.. அடுத்தடுத்து எழும் சிக்கல்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பையை கிரிக்கெட் தொடரை நடத்துவதில் பிசிசிஐ-க்கு நல்ல விஷயம் நடந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஐபிஎல் தொடருடன் சேர்ந்து டி20 உலகக்கோப்பையையும் இந்தியாவில் நடத்தக்கூடாது என கோரிக்கைகள் வலுத்து வந்தன. சமீபத்தில் இது குறித்து பிசிசிஐ ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் ஐபிஎல் தொடரின் எஞ்சியப் போட்டிகளை செப்டம்பர் - அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அக்டோபர் - நவம்பர் மாதத்தில் டி20 உலகக் கோப்பை தொடர் நடத்த ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த சூழலில், இன்று நடைபெற்ற ஐசிசியுடனான ஆலோசனை கூட்டத்தில் உலகக் கோப்பை டி20 தொடரை நடத்துவது குறித்து மேலும் ஆராய கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.
பிசிசிஐ-ன் இந்த கோரிக்கையை ஐசிசி கவுன்சில் ஏற்றுக்கொண்டுள்ளது.
அக்டோபர் மாதத்தில் தான் டி20 உலகக்கோப்பை நடக்கும் என்பதால் பிசிசிஐ-க்கு அதுகுறித்து முடிவெடுக்க ஜுன் 28ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ அதிகாரிகள், டி20 உலகக்கோப்பை இந்தியாவில் தான் நடைபெறும் என உறுதிப்பட தெரிவித்து வரும் நிலையில் அவர்களுக்கு இந்த கெடு விதிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை பிசிசிஐ-ஆல் இந்தியாவில் டி20 உலகக்கோப்பையை நடத்த சரியான திட்டமிட்டு கொடுக்க முடியாவிட்டால், தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்படும். அங்கு ஏற்கனவே ஐபிஎல் தொடர் செப்டம்பர் - அக்டோபர் 10ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அது முடிந்தவுடன் உலகக்கோப்பை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போதுதான் சற்று குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சமாக இருந்த நிலையில் தற்போது 2 லட்சத்திற்கும் கீழ் சென்றுள்ளது. இந்த எண்ணிக்கையானது தொடர்ந்து சரிந்தால் பிசிசிஐ-க்கு சாதகமாகவே அமையும்.

மற்ற செய்திகள்
