FILGHT-அ மிஸ் பண்ண வெஸ்ட் இண்டீஸ் வீரர்.. உலகக்கோப்பை தொடரிலிருந்தே தூக்கிய அணி நிர்வாகம்.. என்னதான் பிரச்சனை..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஷிம்ரோன் ஹெட்மயரை உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இருந்து நீக்கியுள்ளது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்.
2022 ஆம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இதற்கு கிட்டத்தட்ட எல்லா அணிகளுமே தயாராக இருக்கின்றன. இந்நிலையில், மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஹெட்மயர் உலகக்கோப்பைக்கான தொடரில் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில், கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி அவர் ஆஸ்திரேலியா செல்ல இருந்தது.
ஹெட்மயர்
இருப்பினும் குடும்ப காரணங்களினால் அவர் அந்த விமானத்தில் பயணிக்க முடியாது என அணி நிர்வாகத்திடம் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து, அவருக்கு நேற்று கயானாவில் இருந்து ஆஸ்திரேலியா செல்லும் விமானத்தில் ஒரு டிக்கெட் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் நேற்றைய விமானத்தையும் தவறவிட்டிருப்பதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, உலகக்கோப்பைக்கான மேற்கு இந்திய தீவுகள் அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அணி நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
இதனையடுத்து அவருக்கு பதிலாக ஷமர் ப்ரூக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இன்னும் சில தினங்களில் அவர் ஆஸ்திரேலியா சென்றடைவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நிர்வாக இயக்குனர் ஜிம்மி ஆடம்ஸ்,"குடும்பக் காரணங்களால் ஷிம்ரோனின் விமானத்தை சனிக்கிழமையிலிருந்து திங்கட்கிழமைக்கு மாற்றினோம். அவர் ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்வதில் மேலும் தாமதங்கள் மற்றும் சிக்கல்கள் இருந்தால் எங்களுக்கு வேறு வழியில்லை என்று அவருக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. இந்த மிக முக்கியமான போட்டிக்கு தயாராகும் அணியின் திறனை சமரசம் செய்ய நாங்கள் தயாராக இல்லை. எங்கள் டி20 உலகக் கோப்பை அணியில் ஷிம்ரோன் ஹெட்மையருக்குப் பதிலாக ஷமர் புரூக்ஸை நியமிக்க தேர்வுக் குழு ஒருமனதாக முடிவு செய்துள்ளது" என்றார்.
ஷமர் ப்ரூக்ஸ்
சமீபத்தில் முடிவடைந்த கரீபியன் பிரீமியர் லீக்கில் ஜமைக்கா தல்லாவாஸ் அணிக்காக ப்ரூக்ஸ் ஏழு இன்னிங்ஸ்களில் 241 ரன்கள் குவிந்திருந்தது அணி தேர்வுக் குழுவினரை வெகுவாக கவர்ந்திருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ப்ரூக்ஸ் இதுவரையில் 11 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி B பிரிவில் ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளுடன் ரவுண்ட் 1 இல் இடம்பெற்றுள்ளது. பூரன் தலைமையிலான அணி ஸ்காட்லாந்துக்கு எதிராக அக்டோபர் 17 ஆம் தேதி ஹோபார்ட்டில் களமிறங்குகிறது.
T20 உலகக்கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி : நிக்கோலஸ் பூரன் (c), ரோவ்மன் பவல் (wc), ஷமர் ப்ரூக்ஸ், யானிக் கரியா, ஜான்சன் சார்லஸ், ஷெல்டன் காட்ரெல், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹொசின், அல்சாரி ஜோசப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், கைல் மேயர்ஸ், ஓபேட் மெக்காய், ரேமன் ரீஃபர், ஒடியன் ஸ்மித்