'ஐபிஎல்-அ வச்சு... பிசிசிஐ இவ்ளோ ப்ளான் போட்டிருக்கா!?.. இந்த கொரோனாவால நம்ம இன்னும் என்னென்ன இழக்க போறோமோ!.. இனி அவ்ளோ தான்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்ட சம்பவம், ஏகப்பட்ட பின்விளைவுகளை ஏற்படுத்த இருப்பதாக அதிர்ச்சிக்குரிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஐபிஎல் 2021 தொடர் மறுதேதி குறிப்பிடப்படாமல் இன்றைய தினம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஐபிஎல் நிர்வாக குழு மற்றும் பிசிசிஐ அதிகாரிகள் இணைந்து நடத்திய அவசர ஆலோசனையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இது பிசிசிஐக்கு மிகப்பெரிய இழப்புதான்.
ஐபிஎல் 2021 தொடர் துவங்கப்படுவதற்கு முன்னதாகவே ஐபிஎல் நிர்வாகக்குழு சார்பில் கடந்த ஆண்டை போலவே யூஏஇயில் தொடரை நடத்தலாம் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. எனினும், ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதே சிறப்பாக இருக்கும் என்று அந்த ஆலோசனையை ஏற்க பிசிசிஐ மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பாதி போட்டிகள் கூட நடைபெறாத நிலையில் தற்போது தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்தியாவில் தற்போது 2வது கொரோனா அலை ஏற்பட்டுள்ள நிலையில், இங்கு உலக அளவிலான டி20 தொடரை நடத்துவது இயலாது என்பதையே இந்த ஐபிஎல் தொடர் தள்ளி வைப்பு உணர்த்துவதாக பிசிசிஐ அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வரும் நவம்பர் மாதத்தில் கொரோனாவின் 3வது அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுவதை சுட்டிக் காட்டியுள்ள அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டி20 உலக கோப்பையை யூஏஇக்கு மாற்றுவதே புத்திசாலித்தனம் என்றும், அந்த முடிவையே பிசிசிஐ எடுக்கும் என்றும் கூறியுள்ளார்.
டி20 உலக கோப்பையை யூஏஇயில் நடத்துவது குறித்து எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்துடன் ஐசிசி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், 80 சதவிகித பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை இரு வாரங்களில் ஐசிசி மறறும் பிசிசிஐ அறிவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
