கத்தார் உலகக்கோப்பை கால்பந்து தொடர்.. படுகுஷியில் நாமக்கல் மண்டலம்.. இதுதான் காரணமா?
முகப்பு > செய்திகள் > தமிழகம்கத்தாரில் உலகக்கோப்பை கால்பந்து தொடர் இந்த மாதம் துவங்க இருக்கும் நிலையில் நாமக்கல் மண்டலத்தில் இருந்து ஏற்றுமதியாகும் முட்டைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விளையாட்டு கால்பந்து. சாதாரண போட்டிகளுக்கே மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அப்படியிருக்க உலகக்கோப்பை என்றால் சொல்லவா வேண்டும்? உலக மக்களின் பெரும் எதிர்பார்களுக்கு இடையே துவங்க இருக்கிறது இந்த ஆண்டுக்கான கால்பந்து உலகக்கோப்பை. மத்திய கிழக்கு நாடான கத்தாரில் இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற இருக்கிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் கால்பந்து உலகக்கோப்பை நடைபெற்ற நிலையில், தற்போது கத்தாரில் நடைபெற இருக்கிறது.
இதனிடையே, நாமக்கல் மண்டலத்தில் இருந்து ஏற்றுமதியாகும் முட்டைகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்திருக்கிறது. அதற்கு உலகக்கோப்பை கால்பந்து தொடரும் ஒரு காரணமாக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. 2007-08ம் ஆண்டில், பக்ரைன், ஓமன், குவைத், கத்தார் உள்ளிட்ட, 11 வளைகுடா நாடுகளுக்கும், ஆப்கானிஸ்தான் போன்ற பிற நாடுகளுக்கும் 12 முதல் 15 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.
காலாவதி காலத்தை குறைத்தது, பறவை காய்ச்சல் நோயற்ற முட்டை உற்பத்தி மண்டலங்கள் உருவாக்கப்படாதது மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நிர்பந்தம் ஆகியவை காரணமாக கடந்த 12 ஆண்டுகளாக வளைகுடா நாடுகள் பலவற்றுக்கு முட்டை ஏற்றுமதி தடை செய்யப்பட்டது. இந்நிலையில், உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக துருக்கி முட்டையின் கொள்முதல் விலை அதிகரித்திருக்கிறது. இதனால் விலைகுறைவான இந்திய முட்டைகளின் தேவை அதிகரித்திருப்பதாகவும், இதனால் இந்தியாவில் இருந்து மாதத்திற்கு 5 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் கால்நடை பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
கத்தாரில் இந்த மாதம் 20 ஆம் தேதி துவங்க இருக்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் காரணமாக வெளிநாட்டில் இருந்து ஏராளமான மக்கள் கத்தாருக்கு பயணிக்க இருப்பதால் முட்டை ஏற்றுமதி தொடர்ந்து அதிகரிக்கலாம் எனவும் பண்ணை உரிமையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றனர்.

மற்ற செய்திகள்
