நழுவிப் போனது இந்தியாவின் உலகக்கோப்பை வெற்றி வாய்ப்பு.. கண்கலங்கிய ரோஹித்.. IAS அதிகாரி சொன்ன ஆறுதல்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கிறது இங்கிலாந்து. போட்டி முடிவடைந்து ரோஹித் ஷர்மா கண்கலங்கிய நிலையில் சோர்வாக டக்கவுட்டில் அமர்ந்திருந்தது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் இந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சூப்பர் 12 சுற்றின் முடிவுகளில் இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்தது. முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனிடையே இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்டது இந்தியா.
அடிலெய்டில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 168 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி தரப்பில் நிதானமாக ஆடிய விராட் கோலி அரைசதம் எடுத்து அவுட் ஆனார். மற்றொரு பக்கம் நிதானமாக ஆட்டத்தை துவங்கிய ஹர்திக் பாண்டியா இறுதியில் அபாரமாக ஆடி 63 ரன்களை குவித்தார்.
இதனையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் அணியை வெற்றிபெற செய்தனர். 16 ஓவர்களில் இலக்கை எட்டிய இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது. ஜோஸ் பட்லர் 80 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 86 ரன்களும் குவித்தனர்.
போட்டி முடிவடைந்த பிறகு, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா டக்கவுட்டில் சோர்வுடன் அமர்ந்திருந்தார். அப்போது கண்ணீரை துடைத்துக்கொண்ட ரோஹித்தை கண்டு ரசிகர்களும் சோகத்தில் மூழ்கினர். இந்த வீடியோ பலரது இதயங்களையும் நொறுங்க செய்திருக்கிறது. இதனிடையே இந்த வீடியோவை பகிர்ந்து உள்ள ஐஏஎஸ் அதிகாரியான அவனீஷ் சரண், இது விளையாட்டு மட்டுமே. வெற்றியும் தோல்வியும் வாழ்வில் எப்போதும் வந்துபோகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
खेल ही तो है. जीत हार चलती रहती है.pic.twitter.com/JLImR82mvU
— Awanish Sharan (@AwanishSharan) November 10, 2022