'ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா...' 'புது கரன்சி...' 'இன்னும் பல அறிவிப்புகள்...' - இன்ப அதிர்ச்சி அளித்த நித்யானந்தா...!
முகப்பு > செய்திகள் > உலகம்காவல்துறையினரால் தேடப்பட்டுவரும் பிரபல சாமியார் நித்யானந்தா கைலாசத்திற்காக புதிய பணத்தை அறிமுகப்படுத்த போவதாக தனது யூடியூப் சேனலில் அறிவித்துள்ளார்.
பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள, நித்தியானந்தா அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு ஈக்குவடார் நாட்டின் அருகே உள்ள ஒரு தீவை வாங்கிவிட்டதாக அறிவித்தார்.
அதுமட்டுமில்லாமல் அந்த தீவிற்கு 'கைலாசா' என்று பெயரிட்டு அதன் பிரதமராகப் பிரகடனப்படுத்திக் கொண்டார் நித்யானந்தா. மேலும் நித்தியானந்தா மீது நம்பிக்கையுள்ள பக்தர்கள் கைலாசா செல்ல தன் நாட்டுக்கென்று தனி பாஸ்போர்ட்டையும் வெளியிட்டார். கைலாசாவுக்குக் குடியேற விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்தார். சில நாட்கள் சமூக வலைத்தளமே நித்யானந்தாவின் பெயரோடு சுற்றிக் கொண்டிருந்தது.
கடந்த சில நாட்களாக தனது யூடியூப் சேனலில் எந்த வித சர்ச்சையிலும் சிக்காமல் ஆன்மீக தொண்டாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தனது பக்தர்களுக்கு வாழ்த்துச் செய்தியை சொல்லிய நித்தி, பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக கைலாசாவுக்கென்று தனி கரன்சியை உருவாக்கியுள்ளதாகவும், புது வங்கியைத் தொடங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
அவர் அறிவித்த செய்தியில், 'எனக்கு நிறைய நன்கொடைகள் வந்துள்ளன. அவற்றை நல்ல காரியங்களுக்காக செலவிட நமக்கென்று ஒரு வங்கி தொடங்கியுள்ளேன். வாடிகன் வங்கியை மாதிரியாகக் கொண்டு 'ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா' உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் நம் நாட்டிற்கென 300 பக்க பொருளாதார கொள்கையையும் தயார் செய்துள்ளோம். கைலாசாவுக்கான நாட்டுக்கான பணமும் வடிவமைக்கப்பட்டு விட்டது. உள்நாட்டுக்கு ஒரு கரன்சியையும் வெளிநாட்டுக்கு ஒர் கரன்சியையும் அச்சடித்துள்ளோம்.
கைலாசா ரிசர்வ் வங்கி சட்டத்தின்படியே தொடங்கப்பட்டுள்ளது. கைலாசாவுக்கான கரன்சி பெயர், வடிவமைப்பு ஆகியவை விநாயகர் சதுர்த்தியன்று வெளியிடவுள்ளேன். சட்டத்துக்குப் புறம்பாக எதுவும் இருக்காது' எனக் கூறியுள்ளார்.
சுவாமி நித்தியானந்தா மீது கர்நாடகா மற்றும் குஜராத் நீதிமன்றங்களில் அவர் தொடர்பான வழக்குகள் அதிதீவிரமாக விசாரிக்கப்பட்டு வந்தாலும் நித்தியானந்தா அவர்கள் எவ்வித கவலையும் இன்றி தினம் ஒரு வீடியோவாகவும், பக்தர்களுக்கு தினம் ஒரு செய்தியை நேரலையில் வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சர்வதேச போலிசார் நித்யானந்தாவுக்கு எதிராக 'புளு கார்னர்' நோட்டீசைப் பிறப்பித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.