'கொரோனாவால் நிலைகுலைந்த இத்தாலியை... நெகிழ வைத்த 'பச்சிளம்' குழந்தை!'... டயபரைப் பார்த்ததும் மனமுருகிய மக்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Mar 19, 2020 01:21 PM

கொரோனா வைரஸ் பாதிப்பால் கடுமையான பாதிப்புக்குள்ளான நாடு இத்தாலி. ஐரோப்பிய நாடுகள் பல கொரோனாவால் கொடூரமாக பாதிக்கப்பட்டிருப்பினும், இத்தாலிக்கு இழப்புகள் அதிகம். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய ஒரு புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.

new born infant has inspired coronavirus afflicted Italy

சீனாவுக்கு அடுத்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி மாறியுள்ளது. அங்கு, கொரோனா தொற்றால் இதுவரை 2 ஆயிரத்து 503 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 31 ஆயிரத்து 506 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 345 பேர் உயிரிழந்துள்ள நிலையில், புதிதாக 3,526 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

இத்தாலி நாடு முழுவதும் அனுதாப அலை வீசிக்கொண்டிருக்கும் சூழலில், அந்த மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக பிறந்த குழந்தை ஒன்றின் புகைப்படம் மாறியுள்ளது. இத்தாலியில் உள்ள நிகுர்டா மருத்துவமனையில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த குழந்தையின் டயபரின் பின் புறத்தில் "எல்லாம் சரியாகிவிடும்" என்ற வாசகம் இத்தாலி மொழியில் எழுதப்பட்டிருந்தது.

இந்தப் புகைப்படத்தை மார்ச் 16ம் தேதி வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம் அதில் "வேறு எதையும் விட வாழ்க்கை வலிமையானது! இப்போது இருக்கும் கடினமான சூழ்நிலையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் வரவேற்கிறோம்.. வாழ்க்கை எப்போதும் ஓரிடத்தில் நிற்கக் கூடியதில்லை என்பதற்கு நீங்களே சான்று" என பதிவிட்டுள்ளது.

பிறந்த குழந்தையின் டயபரில் எழுதப்பட்டிருக்கும் இந்த வாசகம் அடங்கிய புகைப்படம் பலருக்கும் வாழ்க்கையின் மீது நம்பிக்கையை உண்டாக்குவதால், அது தற்போது உலக மக்களின் இதயங்களை வென்று வருகிறது.

 

Tags : #ITALY #CORONAVIRUS #INFANT