"எங்க நாட்டுல மத்த 'இடங்கள்'ல கொரோனா பரவுனத விட... "இவர் ஒருத்தரால 'ஸ்பீடா' பரவிடுச்சு"... 'சிவகங்கை' நபருக்கு தண்டனை விதித்த 'நாடு'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா வைரஸ் தொற்று கடுமையாக அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து மலேசியா நாட்டிற்கு சென்ற நபரால் 45 க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. நேசர் முகமது சாபுர் பாட்ஷா என்பவர் மலேசியாவின் கெடா மாநிலத்தில் சொந்தமாக உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்.
கடந்த மாதம் சிவகங்கையில் இருந்து மலேசியா சென்ற இவருக்கு கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து பரிசோதனை நடத்திய போது, அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. தொடர்ந்து, பதினான்கு நாட்கள் தனிமையில் இருக்க அதிகாரிகள் அறிவுறுத்திய நிலையில், முகமது சாபுர் இரண்டு நாட்களில் தனது உணவகத்தை திறந்து வேலை செய்ய தொடங்கியுள்ளார்.
மூன்று நாட்களுக்கு பிறகு அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த மூன்று நாட்களில் முகமது சாபுரின் அலட்சியத்தால் கொரோனா வைரசின் திரிபு என கருதப்படும் 'ஜெனோம் 614' எனப்படும் அதிக வீரியமுள்ள வைரஸ் 45 க்கும் மேற்பட்டோருக்கு பரவியது.
மலேசியாவின் மற்ற இடங்களில் கொரோனா பரவியதை விட சிவகங்கையில் இருந்து சென்ற நபரால் மிக வேகமாக கொரோனா பரவியது. இதனை 'சிவகங்கை க்ளஸ்டர்' என்றே மலேசிய சுகாதாரத்துறை அறிவித்தது. இதன் மூலம் அங்குள்ள மூன்று மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவியதையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முகமது சாபுர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், அவருக்கு ஐந்து மாத சிறைத்தண்டனையும், 12,000 ரிங்கிட் அபாரதத்தையும் விதித்துள்ளது மலேசிய நீதிமன்றம்.