தொடர்ந்து உயரும் 'கொரோனா' எண்ணிக்கை... ஆனாலும் 'சென்னை' மக்களுக்கு ஒரு 'அசத்தல்' நியூஸ்!!... 'கெத்தா' மீண்டு வரும் நம்ம 'மெட்ராஸ்'!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.
அதிலும், குறிப்பாக தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று மூலம் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அதே வேளையில் சென்னையில் குணமடைந்து வருவோர் சதவீதம் 85.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்திய அளவில் டெல்லி பகுதியில் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருவோர் சதவீதம் அதிகமான நிலையில் அதற்கு அடுத்தபடியாக சென்னை உள்ளது.
ஜூலை மாதம் முதல் இரண்டு வாரங்களில் சென்னையில் சுமார் 2,400 பேர் வரை கொரோனா தொற்று மூலம் தினந்தோறும் சராசரியாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அடுத்த இரண்டு வாரங்களில் தினந்தோறும் சராசரியாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 1,200 பேர் வரை குறைந்துள்ளது. அதே போல, குணமடைந்து வருவோர் சதவீதமும் உயர்ந்துள்ளது. ஜூன் மாதம் 25 ஆயிரம் பேர் சென்னையில் குணமடைந்த நிலையில், ஜூலை மாதத்தில் மட்டும் 50 ஆயிரம் பேருக்கு அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
வடசென்னை பகுதி மண்டலங்களில் ஆரம்பகட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்த நிலையில், தமிழக அரசின் முயற்சிகள் மூலம் அப்பகுதிகளில் தற்போது கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. அதே போல, சென்னை பகுதியின் மற்ற மண்டலங்களிலும், கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசு கையாண்டு வருகிறது.
சென்னையில் கொரோனா தொற்று குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் போது, கொரோனா மூலம் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை சென்னையில் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மேலும் ஐந்து முதல் பத்து சதவீதம் வரை குறையும். அதே போல, வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொண்டு உடனடியாக அனைவருக்கும் சிகிச்சையளித்து வருவதால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது என தெரிவித்துள்ளனர்.