பாதுகாப்பு உடைகளாகும் 'ரெயின்' கோட்டுகள்... '4 லட்சம்' பேர் வரை உயிரிழக்கும் 'அபாயம்'... திடீரென 'உயரும்' பாதிப்பால் 'உறைந்துள்ள' நாடு...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Apr 18, 2020 09:51 PM

ஜப்பானில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Japan Medical Workers Fear The Worst As Coronavirus Cases Spike

ஜப்பானில் பிப்ரவரி மாதம் முதல் இதுவரை சுமார் 10 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அங்கு முதல்கட்டமாக 7 நகரங்களில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது மிகவும் தாமதமான நடவடிக்கை என விமர்சனம் எழுந்துவரும் நிலையில் தற்போது அங்கு கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து வருகிறது.

குறிப்பாக ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போனதே இதற்கு காரணமெனக் கூறப்படுகிறது. மேலும் கொரோனா பாதிப்பை எதிர்கொள்வதற்கு ஜப்பான் மருத்துவமனைகள் தயாராக இல்லை எனக் கூறப்படும் நிலையில், மருத்துவ பணியாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு உடைகள் இல்லாததால் மக்கள் ரெயின் கோட்டுகளை கொடுத்து உதவுமாறு ஒஸாகா மாநில ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் டோக்கியோவில் ஒரே மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் என 87 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜப்பானில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறிவரும் நிலையில் அங்கு கடந்த 2 மாதங்களில் 90 ஆயிரம் பேருக்கு மட்டுமே பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கு ஒரு லட்சம் பேருக்கு 7 தீவிர சிகிச்சை படுக்கைகள் மட்டுமே உள்ளது எனவும், வெண்டிலேட்டர் போன்ற மருத்துவ கருவிகளுக்கும் அங்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து கொரோனா பாதிப்பின் தீவிரத்தை உணர்ந்த அரசு புதிய சோதனை மையங்களை அமைத்து வருவதோடு பல நிறுவனங்களிடமும் வெண்டிலேட்டர்களை தயாரித்து தருமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் ஜப்பானில் 4 லட்சம் பேர் வரை உயிரிழக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.