'நீங்க பேசுனா மட்டும் போதும்'... ஸ்மார்ட் போன் மூலம்... கொரோனா தொற்றை கண்டுபிடிப்பது எப்படி?.. பிரம்மிக்கவைக்கும் படைப்பு!
முகப்பு > செய்திகள் > உலகம்ஸ்மார்ட் போனை பயன்படுத்தி கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான புதிய தொழில்நுட்பத்தை மும்பை மாணவர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.
மும்பை மாநகரில் உள்ள டி.ஒய்.பாட்டீல் இன்ஸ்டிடியூட் ஆப் பயோடெக்னாலஜி அண்ட் பயோஇன்பர்மேடிக்ஸின் பேராசிரியர் சந்தோஷ் போத்தே வழி நடத்துதலில், மாணவர் களான ரேஷ்மி சக்கரவர்த்தி, பிரியங்கா சவுகான், பிரியா கார்க் ஆகியோரும் இணைந்து கொரோனா வைரஸ் கண்டறிவதில் ஒரு புதிய தொழில் நுட்பத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இவர்கள் காப்புரிமை பெற்ற, ஏ.ஐ. (Artificial Intelligence - AI) என்று சொல்லப்படக் கூடிய செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கருவியை கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
இந்தக் கருவியுடன், ஸ்மார்ட் போனை பயன்படுத்தி, குரல் அடிப்படையிலான சோதனை மூலம் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கிறதா, இல்லையா என்பதை கண்டுபிடித்து விடலாம்.
இந்த கருவி, ஒரு செயலி (ஆப்) மூலம் குரல் அடிப்படையில் ஆய்வு செய்து கொரோனா வைரசை கண்டுபிடித்து விடுகிறது.
இவர்கள் கண்டுபிடித்துள்ள கருவியை இத்தாலியில் ரோம் நகரில் உள்ள டோர் வெர்கட்டா பல்கலைக்கழகத்தில் சோதனை ரீதியில் பயன்படுத்தி வருகிறார்கள்.
ஏற்கனவே 300 பேருக்கு இந்த கருவியைக்கொண்டு சோதனை நடத்தி இருக்கிறார்கள். இதில் 98 சதவீதம் துல்லியமான முடிவு கிடைத்திருக்கிறது என்பதுதான் மகிழ்ச்சி தரக்கூடிய தகவலாக அமைந்துள்ளது.
இந்த கருவி எப்படி செயல்படுகிறது என்கிறபோது அதற்கு பேராசிரியர் சந்தோஷ் போத்தே கூறும் பதில்:-
"செயலியில் உள்ள மைக்கில் ஒருவர் பேசும்போது, பல்வேறு அளவுருக்களில் குரல் அதிர்வு, சத்தம் விலகல் என பல்வேறு வகைகளில் குரல் உடைகிறது.
இந்த மதிப்பீடுகள், சாதாரண நபர் ஒருவரின் மதிப்பீடு களுடன் ஒப்பிடப்படுகின்றன. அதைத் தொடர்ந்து காப்புரிமை பெற்றுள்ள தொழில் நுட்பம், சம்மந்தப்பட்ட நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா, இல்லையா என்பதை கண்டறிகிறது" என்று தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, "நமது உள்ளுறுப்புக்கள் ஒவ்வொன்றும், ஒரு ஒத்ததிர்வு கொண்டவை ஆகும். எனவே நம் இதயத்திலோ, நுரையீரலிலோ சிக்கல் இருந்தால், அது நமது குரலில் பிரதிபலிக்கும்.
ஒரே நபருக்கு அவர் ஆரோக்கியமாக இருக்கிறபோது ஒரு குரல் இருக்கும். நோய் இருந்தால் வேறொரு குரல் இருக்கும்.
நுரையீரல் மற்றும் காற்று அலைகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்துவதால், குரல் நிச்சயம் பாதிக்கப்படுகிறது. இதை வைத்து கொரோனா வைரசை கண்டறிய முடியும்" என்கிறார் பேராசிரியர் ஜியோவானி சாகியோ.
மேலும், "நாட்டின் மருத்துவ உள்கட்டமைப்பும், ஒட்டு மொத்த மருத்துவ சமூகமும், மிகுந்த அழுத்தத்துக்கு ஆளாகிறபோது, நோயாளிகளுக்கும், ஆய்வுக்கூட பரிசோதகருக்கும் எந்த வெளிப்பாடும் இல்லாமல், தொலைதூரத்தில் நோயாளிகளை அடைய இது சிறந்த தீர்வு ஆகும். தற்போதைய சோதனை முறைகளை மாற்றுவதற்கான கருவியை நாங்கள் கண்டறியவில்லை என்றாலும், இந்த சோதனை எளிமையானதாக இருக்கிறபடியால், ஆரம்ப கட்டத்திலேயே கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கியவர்களை கண்டறிய இது உதவுகிறது. எனவே கொரோனா வைரஸ் பரவுவதும் கட்டுப்படுத்தப்படுகிறது" என்றும் தெரிவித்தனர்.