'நாகையில்' 'மீனவர்களால்' கண்டுபிடிக்கப்பட்ட... 'இரண்டாம் உலகப் போரின் குண்டு...' '300 மீட்டர்' தூரம் 'வெடித்து சிதறியது...'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Apr 18, 2020 09:15 PM

நாகை மாவட்டத்தில் மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட 2ஆம் உலகப் போரின் குண்டு ஒன்று காவல்துறையினரால் வெடிக்க வைக்கப்பட்ட போது சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

2nd world rocket launcher burst around 300 Meters in Nagai

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசலில் கடந்த 15ஆம் தேதி மீனவர்கள் வலையில் ஒரு மர்மபொருள் சிக்கியது. சுமார் ஒருமீட்டர் உயரமும், 11 இன்ச் சுற்றளவும் கொண்ட அந்த பொருளை மீனவர்கள் பத்திரமாக கரைக்குக் கொண்டு வந்தனர்.

ராக்கெட் லாஞ்சர் வடிவிலான சிவப்பு நிற சிலிண்டர் வடிவில் அந்த பொருள் இருந்தது. இதுகுறித்து கரைக்கு திரும்பிய மீனவர்கள் சீர்காழி போலீசார் மற்றும் கடலோர காவல்படை கியூ பிரிவு போலீசார் ஆகியோருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து விரைந்து வந்த போலீசார் அந்த பொருளை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்தில் மண்ணில் புதைத்து வைத்தனர்.

இந்நிலையில், இன்று திருச்சி மற்றும் நாகப்பட்டினத்தில் இருந்து வந்த வெடிகுண்டு நிபுணர் குழுவினர் அதனை சோதனை செய்தனர். இந்த சோதனையில் அந்தப் பொருள் நீர்மூழ்கி கப்பல் மற்றும் விமானத்திலிருந்து வீசப்படும் ராக்கெட் லாஞ்சர் வகையிலான வெடிகுண்டு என்பது தெரியவந்தது. வாயு மற்றும் வெடிமருந்துடன் கலந்து வெடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருந்ததும் அறியப்பட்டது.

இவ்வகை குண்டுகள் இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்டவை என்றும், துருப்பிடித்திருந்த காரணத்தால், எந்த நாட்டின் தயாரிப்பு என்பது தெரியவில்லை என்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து திருமுல்லைவாயில் கடற்கரையில் அந்த குண்டை செயலிழக்கச் செய்யும் முயற்சியை நிபுணர்கள் மேற்கொண்டனர். கடற்கரை மண்ணுக்கு அடியில் பாதுகாப்பாக வைத்து, மின்சார பேட்டரிகள் இணைப்புகளை வெடிகுண்டுடன் இணைத்தனர். இதையடுத்து பொதுமக்கள் அனைவரையும் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு வெளியேற்றினர்.

இதனைத் தொடர்ந்து குண்டு வெடிக்கக் செய்யப்பட்டது. சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு செந்நிற புகையுடனும், பலத்த சப்தத்துடனும் வெடித்துச் சிதறியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.