'அழகை விட உயிரே முக்கியம்...' 'வேறு' வழியில்லாமல் 'ஜப்பான் அரசு...' செய்த 'திகைக்கச் செய்யும்' காரியம்...
முகப்பு > செய்திகள் > உலகம்ஜப்பான் அரசு மக்கள் கூடுவதைத் தடுப்பதற்காக டோக்கியோ அருகில் சகூரா நகரில் உள்ள துலிப் மலர் தோட்டத்தில் ஒரு லட்சம் மலர்களைப் மொத்தமாகப் பறித்துவிட்டது.

ஜப்பான நாட்டில் கடந்த வாரம் கொரோனா வைரஸ் பரவுதைத் தடுக்க அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அங்கு இதுவரை 11 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் ஒரு இடத்தில் கூடுவதைத் தவிர்க்குமாறு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் வார இறுதி நாட்களில் மக்கள் பூங்காக்களில் கூடுவதைத் தடுக்க முடியவில்லை. அரசு சார்பில் எவ்வளவோ எடுத்துக் கூறியும் மக்கள் மலர்த்தோட்டங்களுக்கு வந்து கொண்டே இருந்தனர்.
குறிப்பாக, தலைநகர் டோக்கியோவுக்குக் கிழக்கே 50 கி.மீ. தொலைவில் உள்ள சகூரா என்ற நகரில் உள்ள புருசாடோ ஹிரோபா மலர்த் தோட்டத்தில் வார இறுதி நாட்களில் ஏராளமான மக்கள் திரண்டனர்.
இவ்வாறு தொடர்ந்து மக்கள் கூடினால் கொரோனா பரவுவதை தடுக்க முடியாது என கருதிய சுற்றுலாத்துறை, மலர்களை விட மனிதர்களின் உயிர்கள் தான் முக்கியம் எனக் கருதி அனைத்து மலர்களையும் பறிக்க முடிவு செய்தது. இதனால் சுமார் 7 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் பூத்திருந்த ஒரு லட்சம் துலிப் மலர்களை பறித்து விட்டனர். இதனால் உலகின் அழகான பகுதியான புருசாடோ ஹிரோபா பூங்கா தற்போது பொலிவிழந்து காணப்பட்டது.
"மக்கள் அதிகமாகக் கூடுவதைத் தடுக்க வேறு வழியில்லாமல் இந்த முடிவுக்கு வந்திருக்கிறோம்" என சகூரா நகர சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பறித்த மலர்களை நன்கொடையாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சுற்றுலாத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
