என்ன கொடுமை! மத்த நாடுகள்ல இருந்து 'கொரோனா' பரவுதாம்... 'அதிரடி'யில் இறங்கிய சீனா!
முகப்பு > செய்திகள் > உலகம்வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் கொரோனா பரவுவதால் எல்லைப்பகுதிகளில் சோதனையை சீனா தீவிரப்படுத்தி இருக்கிறது.

கடந்த ஆண்டு சீனாவின் வுஹான் நகரில் இருந்து உலக நாடுகளுக்கு பரவிய கொரோனா வல்லரசு நாடுகள் உட்பட அனைத்து நாடுகளையும் தீவிர துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ஆனால் சீனாவில் இந்த வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. தற்போது அங்கு சமூக தொற்று கட்டுப்படுத்தப்பட்டதாகவும், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு மட்டுமே வைரஸ் உறுதி செய்யப்படுவதாகவும் சீனா கூறியுள்ளது. மேலும் கடந்த சில தினங்களாக கொரோனாவால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் சீனாவில் நேற்று மட்டும் சுமார் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறதாம். இவர்களில் 23 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். வெளிநாட்டு பயண தொடர்பால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1610 ஆக உயர்ந்திருப்பதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் கூறி உள்ளது. இதில் 811 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், 41 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனால் தற்போது அனைத்து எல்லைப்பகுதிகளிலும் தீவிர பரிசோதனை மற்றும் சிகிச்சையை சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். அப்பகுதிகளுக்கு கூடுதல் மருத்துவ உபகரணங்கள், பரிசோதனை கருவிகள் மற்றும் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
