'கடையைத் திறக்க முடியுமா? முடியாதா?'.. 'பான் மசாலாவுக்கு அடிமையானவரால்' பெட்டிக்கடை ஓனருக்கு நேர்ந்த 'பெரும் சோகம்!'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 22, 2020 10:06 PM

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் பான் மசாலா கடையை திறந்து வைக்க மறுத்த முதியவர் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிரவைத்துள்ளது.

shopkeeper refused to sell pan masala beaten to death by neighbour

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு வரும் மே 3-ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களை விற்பதற்கும் வாங்குவதற்கும் அதற்காக மட்டுமே வெளியே செல்வதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த கொலைச் சம்பவம் அதிரவைத்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள நவீன் நகரில் பான் மசாலா கடையை நடத்தி வந்த பிரேம் நரேன் திவாகர் எனும் 60 வயதான நபரிடம், அதே பகுதியைச் சேர்ந்த பக்கத்து குடியிருப்புவாசி நிதின் என்பவர் கடையைத் திறந்து பான் மசாலா எடுத்து தரச் சொல்ல, அதற்கு பிரேம் நரேன் திவாகர் மறுக்க, பான் மசாலா புகையிலைக்கு அடிமையான நிதின், தனக்கு புகையிலை கொடுத்தே தீர வேண்டும் என்று வாக்குவாதம் செய்துள்ளார்.

வாக்குவாதம் முற்றவே, நிதின் என்பவர் பிரேம் நரேன் திவாகரை அடித்துத் தாக்கி கீழே தள்ளி நிலைகுலையச் செய்துவிட்டு தப்பியோடிவிட்டார். அக்கம் பக்கத்தினர் பிரேம் நரேன் திவாகரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். முதலில் சுயநினைவை இழந்த பிரேம், திங்கட்கிழமை அன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் நிதினை தேடி வருகின்றனர்.