‘100% கடனையும் திருப்பி கொடுத்திடுறேன்’.. ‘ஆனா அத மட்டும் முடிச்சு வச்சுருங்க’.. விஜய் மல்லையா பரபரப்பு ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | May 14, 2020 02:04 PM

வங்களில் தான் பெற்ற 100 சதவீத கடனையும் திருப்பி செலுத்திவிடுவதாக தெரிவித்து மத்திய அரசிடம் விஜய் மல்லையா ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார்.

Please take my money unconditionally and close, Vijay Mallya

விமான நிறுவனம், மதுபான ஆலை என பல்வேறு தொழில்களை நடத்தி வந்தவர் தொழிலதிபர் விஜய் மல்லையா. இவர் பல்வேறு இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடினார். அவரை இந்தியா அழைத்து வர மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக அமலாக்கப் பிரிவினர், சிபிஐ அதிகாரிகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் இந்தியப் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து பொருளாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக 20 லட்சம் கோடி ரூபாய்க்கான பொருளாதார மீட்பு திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். அதில் முதற்கட்டமாக 6 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார்.

இந்நிலையில் தொழிலதிபர் விஜய் மல்லையா இதுகுறித்து ட்விட் செய்துள்ளார் . அதில்,‘கொரோனா வைரஸிடம் இருந்து பொருளாதாரத்தை மீட்க இந்திய அரசு 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை அறிவித்ததை நான் வாழ்த்துகிறேன். இந்திய அரசு அவர்களின் தேவைக்கு ஏற்றார்போல் ரூபாய் நோட்டுகளை அச்சிடலாம். ஆனால் என்னை போன்ற சிறு பங்களிப்பாளர் 100 சதவீதம் கடனை வங்கிகளிடம் திருப்பிச் செலுத்துகிறேன் என பலமுறை கோரிக்கை விடுத்தும் தொடர்ந்து புறக்கணிக்கிறது. நான் வங்களுகளுக்கு செலுத்த வேண்டிய அனைத்து கடன்களையும் செலுத்திவிடுகிறேன். நிபந்தனையில்லாமல் ஏற்றுக்கொண்டு எனக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் கைவிடுங்கள் என மத்திய அரசிடம் வேண்டுகோள் வைக்கிறேன்’ என விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.