"உயிரே போனாலும் நான் இப்போ ஊருக்கு வரமாட்டேன்.." பிடிவாதத்துடன் இந்திய மாணவி.. நெகிழ்ச்சி பின்னணி
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைன் மீது கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக, ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில், இரு நாட்டினைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

மேலும், இந்த போரினை நிறுத்த வேண்டி, பல உலக நாடுகள், ரஷ்யாவிடம் கோரிக்கை வைத்தும் வருகின்றது.
அதே போல, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த மக்கள், உக்ரைனில் போருக்கு மத்தியில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
ஆச்சரியம்
மத்திய, மாநில அரசுகள் உதவியுடன் மாணவ மாணவிகள் மற்றும் இந்திய மக்கள், தங்களின் சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். இந்திய மாணவர்கள் பலர் நாடு திரும்பி வரும் நிலையில், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், நாடு திரும்ப மறுத்துள்ள சம்பவம், பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
ஹரியானா மாணவி
உக்ரைன் தலைநகர் கீவில், மருத்துவ படிப்பு பயின்று வரும் நேஹா என்ற மாணவி, போர் நடப்பதற்கு முன்பாக விடுதி ஒன்றில் தங்கி வந்துள்ளார். போர் தொடங்கிய பிறகு, விடுதி மூடப்பட்டதால், உக்ரேனியர் ஒருவர் தன்னுடைய வீட்டில் தங்கிக் கொள்ள, அந்த பெண்ணிற்கு அனுமதி கொடுத்துள்ளார்.
நாட்டிற்கான பணி
ரஷ்ய படையின் தாக்குதலை எதிர்கொள்ள, உக்ரைன் மக்கள் பலரும் ஆயுதம் எடுத்து, ராணுவத்தினருடன் இணைந்து பணிபுரிந்தும் வருகின்றனர். அந்த வகையில், நேஹாவுக்கு அடைக்கலம் கொடுத்த நபரும், நாட்டைக் காக்கும் பணியில், தன்னை ஈடுபடுத்தியுள்ளார். இதனால், அந்த நபரின் மனைவி மற்றும் 3 குழந்தைகள் தனிமையில் உள்ளனர்.
இந்தியாவுக்கு வரமாட்டேன்
அந்த உக்ரைன் பெண் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு துணையாக, அவர்களை அருகேயிருந்து கவனித்துக் கொள்ளப் போவதாக, மாணவி நேஹா தெரிவித்துள்ளார். 'நான் உயிரோடு இருப்பேனா, இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால், இப்படி ஒரு சூழலில் அவர்களை விட்டு விட்டு நிச்சயம் நான் இந்தியாவுக்கு வரமாட்டேன்' என தனது தாயாரிடம் நேஹா தெரிவித்துள்ளார்.
மனம் வரவில்லை
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு ராணுவத்தில் இருந்த தனது தந்தையை இழந்துள்ளார் நேஹா. அதன் பிறகு, கடந்த ஆண்டு உக்ரைன் மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. தற்போது, இந்தியாவுக்கு திரும்ப நேஹாவுக்கு வாய்ப்பும் அமைந்துள்ளது. ஆனாலும், தன்னிடம் அதிகம் ஒன்றிப் போன அந்த குழந்தைகளை விட்டு விட்டு, நேஹாவுக்கு சொந்த ஊர் கிளம்ப மனம் வரவில்லை.
வியப்பில் ஆழ்த்திய முடிவு
மகளைக் காண வேண்டி, நேஹாவின் தயார் எவ்வளவோ கெஞ்சி பார்த்துள்ளார். ஆனால், நிலைமை சரியான பிறகு தான், அவர்களை விட்டு விட்டு செல்வேன் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார் நேஹா. பலரும், சொந்த ஊர் சென்றால் போதும் என இந்தியா திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், மாணவி நேஹாவின் முடிவு, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில தினத்திற்கு முன், இந்திய மாணவர் ஒருவர், தன்னுடைய நாய்க்குட்டியை உடன் அழைத்து வர முடியாததால், அதனுடன் உக்ரைனில் தான் இருப்பேன் என கூறியிருந்த செய்தியும், அதிகம் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
