"அந்த ராக்கெட்ட மட்டும் ரஷ்யா யூஸ் பண்ணா அவ்வளவுதான்"..ஆயுத நிபுணர்கள் சொல்லிய ஷாக் நியூஸ்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகமே இப்போது உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரை உன்னிப்பாக கவனித்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை உக்ரைன் எல்லைக்குள் ரஷ்ய ராணுவம் நுழைய உத்தரவிட்டார் அதிபர் புதின். அதைத் தொடர்ந்து தரை, வான் மற்றும் கடல் என மும்முனை தாக்குதலை நடத்திவருகிறது ரஷ்யா. இதுவரையில் மூன்று குழந்தைகள் உட்பட 198 உக்ரேனியர்கள் இந்தப் போரின் காரணமாக உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ரஷ்யா தனது தெர்மோபாரிக் ராக்கெட்டுகளை உக்ரைன் மீது உபயோகித்தால் விளைவுகள் இன்னும் மோசமாகும் என எச்சரிக்கிறார்கள் ஆயுத நிபுணர்கள்.

தெர்மோபாரிக் ராக்கெட்
ரஷ்யாவின் ஆயுதங்களில் மிக மோசமானவற்றுள் ஒன்றாக கருதப்படும் இந்த தெர்மோபாரிக் ராக்கெட்டுகள் மோசமான அழிவை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. இவை எந்த இடத்தில் வெடிக்க வைக்கப்படுகிறதோ அங்குள்ள ஆக்சிஜனை துரிதமாக வெளியேற்றிவிடும். இதனால் நுரையீரல்கள் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, மனிதர்களின் உள் உறுப்புகளை மிக மோசமாக சேதப்படுத்தும் எனவும் இதனால் மனிதர்களின் செவிப் பறை மோசமாக சிதைவடையும் என எச்சரித்து இருக்கிறது அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏ.
உக்ரைனுக்குள் தெர்மோபாரிக் ராக்கெட்
இந்நிலையில், ரஷ்ய - உக்ரைன் எல்லை பகுதியான தெற்கு பெல்கோரோட் (Belgorod) -ல் தெர்மோபாரிக் ராக்கெட்களை ஏந்திச் செல்லும் டேங்கர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மனிதர்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளில் இந்த ராக்கெட் ஏவப்பட்டால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் பலரும் அச்சமடைந்துள்ளனர்.
ஏற்கனவே சிரியாவில்..
சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிராக எழுந்த உள்நாட்டு போரில் அரசுக்கு ஆதரவாக களமிறங்கிய ரஷ்யா அங்கே 2016 ஆம் ஆண்டு இந்த தெர்மோபாரிக் ராக்கெட்களை ஏவியது குறிப்பிடத்தக்கது. மேலும், செச்சன்யா பகுதியிலும் இந்த ராக்கெட்களை கொண்டு ஏற்கனவே தாக்குதல் நடத்தி இருக்கிறது ரஷ்யா. இப்போது உக்ரேனுக்கு உள்ளேயும் இந்த வகை ராக்கெட்டுகளை ரஷ்யா எடுத்துச் சென்றிருப்பது உலக அளவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்
