"ரஷ்யர்களாக இருக்க வெட்கப்படுறோம்.. போர் வேண்டாம்.. இன்று உக்ரைன், நாளை நீங்களாக இருக்கலாம்".. ரஷ்ய மக்கள் போர்க்கொடி
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைனை போர் தொடுத்திருக்கும் ரஷ்யாவின் செயலுக்கு உலக நாடுகள் மட்டுமின்றி ரஷ்ய மக்களும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

உக்ரைனுக்கு எதிராக நேற்று ரஷ்ய அதிபர் புதின் ராணுவ நடவடிக்கையை அறிவித்தார். முதல் நாளான நேற்று ரஷ்ய வான்வழி கட்டமைப்புகள் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்தது. இரண்டாம் நாளான இன்று தரைவழித் தாக்குதலை ரஷ்யா அதிகப்படுத்தியுள்ளது. கீவ் நகருக்குள் காலையில் இருந்தே குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டுவருகிறது. இதற்கிடையில், வாக்குறுதியை மீறி ரஷ்ய படைகள் குடியிருப்புப் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தியுள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டினார்.
மேலும், 'ரஷ்யாவுக்கு நான் தான் முதல் இலக்கு. என் குடும்பம் இரண்டாவது இலக்கு. எந்தச் சூழலிலும் நான் கீவில் தான் இருப்பேன். என் குடும்பம் உக்ரைனில்தான் இருக்கும்' என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், கீவ் நகரில் அரசு அதிகாரிகள் குடியிருப்பு வளாகத்திலிருந்து 3 மைல் தொலைவில் தற்போது ரஷ்யப் படைகள் முகாமிட்டுள்ளன. இந்தச் சூழலில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்க்யெ லாவ்ரோவ், 'உக்ரைன் வீரர்கள் சண்டையை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்குத் தயார்' என்று கூறியுள்ளார். முன்னதாக அவர் இன்று காலையில், 'உக்ரைன் வெளிநாட்டு அடக்குமுறையில் இருக்கிறது. அதை மீட்கவே இந்த நடவடிக்கை' என்று கூறியிருந்தார். ரஷ்ய படைகளால் இதுவரை 100-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும், பொதுமக்களும் இறந்து விட்டதாக உக்ரைன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ரஷ்யாவின் செயலுக்கு உலக நாடுகள் மட்டுமின்றி ரஷ்ய மக்களும் ஏராளமானோர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மற்றும் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரங்களில் மக்கள் அதிபர் புதினுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். நேற்றைய தினம் அரசுக்கு எதிராகப் போராடினால், கடும் விளைவுகளச் சந்திக்க நேரிடும் என பொதுமக்களை ரஷ்ய அதிகாரிகள் எச்சரித்திருந்தனர். இருப்பினும், அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் ரஷ்ய மக்கள் வீதிகளில் இறங்கி, ரஷ்யராக இருப்பதற்கு வெட்கப்படுகிறோம். புதின் அரசு உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும். இன்று உக்ரைன், நாளை நீங்களாகக் கூட இருக்கலாம்" என்று வாசகமிடப்பட்ட பதாகைகளை ஏந்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஆயிரக்கணக்கானோர் கைதாகி உள்ளனர். அப்போது இளைஞர் ஒருவர், 'என்னிடம் சொல்ல வார்த்தைகள் இல்லை. போர் நடத்தப்படுவதை வெறுக்கிறேன்' என்றார். இளம் பெண் ஒருவர் 'இந்தப் போரை நிறுத்த உத்தரவிடும் வலிமை எங்களுக்கு இல்லையே என்று ஆதங்கப்படுகிறோம்' என்று கூறினார். ரஷ்ய மக்கள் போராட்டத்திற்கு உக்ரைன் அதிபர் உணர்ச்சிகரமாக நன்றி தெரிவித்திருந்தார். மேலும் 'உக்ரைனில் நடந்துவரும் போர் சூழல்களை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். உயிரிழப்புகள் குறித்தும் நாங்கள் கவலை கொண்டுள்ளோம்' என தாலிபான் அரசு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
