UKRAINE RUSSIA WAR: "போர் முடிவுக்கு வரணும்".. உக்ரைனின் அமைதிக்காக கடவுளிடம் மன்றாடும் போப் பிரான்சிஸ்
முகப்பு > செய்திகள் > உலகம்சாம்பல் புதன் நோன்பு தினத்தில் உக்ரைனின் அமைதிக்காக பிரார்த்தனை செய்ய போப் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நான்காவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. அதன்படி, இன்று உக்ரைன் மீதான ரஷ்யாவின் அதிரடி தாக்குதல் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்ய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் தலைநகர் கீவின் பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதேபோல் மற்றொரு பெரிய நகரமான கார்கிவிலும் ரஷிய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு வந்தால் மட்டுமே இழப்புகளை தவிர்க்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், போர் தொடங்கியது முதல் தற்போது வரை உக்ரைன் நடத்திய பதில் தாக்குதல்களில் 4300-க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது. ரஷ்ய ராணுவத்தின் 146 பீரங்கிகள், 27 போர் விமானங்கள், 26 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
அதேபோன்று ரஷ்ய பாதுகாப்புத்துறை கூறியிருக்கும் தகவலின் படி, 223 பீரங்கிகள் மற்றும் ராணுவ வாகனங்கள், 28 போர் விமானங்கள், 39 ராக்கெட் லாஞ்சர்கள், 86 சிறிய ரக பீரங்கி மற்றும் மோர்ட்டார்கள், 143 சிறப்பு ராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், உக்ரைன் ராணுவம் ஆயுதங்களை கைவிட்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்யா தெரிவித்திருந்தது. ஆனால் இதற்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்தது.பின்னர் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இதற்காக, பெலாரஸ் நாட்டில் உள்ள கோமலுக்கு ரஷ்ய தூதுக்குழு வந்துள்ளதாக ரஷிய அதிபர் மாளிகை தெரிவித்திருந்தது.
பெலாரசில் வைத்து பேச்சுவார்த்தை நடத்துவதை உக்ரைன் ஏற்கவில்லை என்றும் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை உக்ரைன் வீணடிப்பதாக ரஷ்யா குற்றம்சாட்டியது. இந்நிலையில், ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் தனது பிரதிநிதிகளை பெலாரசின் கோமல் பகுதிக்கு அனுப்ப ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, போப் பிரான்சிஸ், "உக்ரைனில் போர் முடிவுக்கு வர நாம் இறைவனிடம் மன்றாடுவோம்" என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "உக்ரைனில் துன்புறும் மக்களுக்கு அருகில் இருக்கவும், நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் என்பதை உணர்ந்துகொள்ளவும் வருகிற மார்ச் 2ம் தேதி சாம்பல் புதன் அன்று, உக்ரைனின் அமைதிக்காக பிரார்த்தனை மற்றும் நோன்பு தினத்தில் பங்கேற்க அனைவருக்கும் எனது அழைப்பை விடுக்கிறேன். போரை முடிவுக்கு கொண்டுவர கடவுளிடம் மன்றாட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
I renew my invitation for everyone to take part on 2 March, Ash Wednesday, in a Day of Prayer and Fasting for Peace in #Ukraine, in order to be near to the suffering Ukrainian people, to be aware that we are all brothers and sisters, and to implore God for an end to the war. pic.twitter.com/ecNo53Ofya
— Pope Francis (@Pontifex) February 27, 2022