RUSSIA-UKRAINE WAR: "என்ன ஆனாலும்.. என் செல்லக் குட்டிய விட்டு போக மாட்டேன்.. " அடம்பிடிக்கும் இந்திய மாணவர்.. நெகிழ்ச்சி பின்னணி
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்யா - உக்ரைன் போர், கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக, மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இரு நாட்டினைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் மற்றும் உக்ரைனிலுள்ள பொது மக்கள் பலர், இந்த போரில் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கும் நிலையில், உக்ரைன் நாட்டின் பதற்ற நிலையும் அதிகரித்து வருகிறது.
அது மட்டுமில்லாமல், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களும், உக்ரைனில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இந்திய மாணவர்
இதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் உதவியுடன் பல்வேறு மாணவ மாணவிகள் மற்றும் இந்திய மக்கள் பலர், மீண்டும் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், இந்தியாவைச் சேர்ந்த ரிஷப் கவுசிக் என்ற மாணவர், உக்ரைனில் அமைந்துள்ள கார்கீவ் தேசிய பல்கலைக்கழகத்தில் சாப்ட்வேர் இன்ஜினியரிங்கில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
அனுமதி மறுப்பு
முன்னதாக, தெருவில் இருந்து மீட்கப்பட்ட நாய்க்குட்டி ஒன்றை, கவுசிக் வாங்கி வளர்த்து வந்துள்ளார். இந்திய மாணவர்கள் பலர் நாடு திரும்பி வரும் நிலையில், தனது வளர்ப்பு நாய்க்குட்டியுடன் இந்தியாவுக்கு திரும்ப வேண்டுமென கவுசிக் விரும்பியுள்ளார். ஆனால், நாய்க்குட்டியை உடன் அழைத்துச் செல்ல கவுசிக்கிற்கு அனுமதி கிடைக்கவில்லை. சில ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்ற பெயரில் அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது.
மனம் வரவில்லை
இதனால், இந்தியாவிற்கு திருப்பிய மறுத்துள்ளார் கவுசிக். இது பற்றி பேசும் அவர், 'மலிபூ என பெயரிடப்பட்ட எனது செல்ல நாய்க்குட்டியுடன் இந்தியாவுக்கு திரும்ப அனுமதி கிடைக்கவில்லை. இதனால், நாய்க்குட்டியை உக்ரைனிலேயே விட்டுப் போக எனக்கும் மனம் வரவில்லை. அதனை நான் ஒரு போதும் செய்யப் போவதுமில்லை. இப்படி ஒரு சூழலில், இங்கேயே இருப்பது என்பது ஆபத்தான ஒன்று தான் என்பதும் எனக்கு நன்கு தெரியும். ஆனாலும், நாய்க்குட்டியை கைவிட என்னால் முடியாது.
என்ன வந்தாலும் சரி
என்னை பார்த்து கொள்ள எனது குடும்பத்தினர் இருக்கிறார்கள். ஆனால், மலிபூவிற்கு குடும்பம் என்றால் அது நான் மட்டும் தான். அதனை நான் இங்கயே விட்டு விட்டு, இந்தியாவுக்கு சென்று விட்டால், மகிபூவை யார் பார்த்துக் கொள்வது?. அந்த பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கிறேன். என்ன வந்தாலும் சரி, மலிபூவை நான் பார்த்துக் கொள்கிறேன்' என ரிஷப் கவுசிக் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை
இது பற்றி, கவுசிக்கின் தந்தை பேசுகையில், 'என்ன வந்தாலும் தன்னுடைய நாய்க்குட்டியை தனியாக விட்டு வர கவுசிக் தயாராகவில்லை. அங்குள்ள சூழ்நிலை சரியாகி, எனது மகனும் நாய்குட்டியும், பாதுகாப்பாக நாட்டிற்கு திரும்பி வரை வேண்டும் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன்' என தெரிவித்துள்ளார்.
போர் காரணமாக, பலரும் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பி வரும் நிலையில், தனது வளர்ப்பு நாய்க்குட்டிக்காக உக்ரைன் நாட்டிலேயே தங்க இந்திய மாணவர் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
