"300 பேருக்கும் ஒரே ஒரு பாத்ரூம் தான்".. "உயிர் பயத்தை விட".. நாட்டையே உலுக்கிய 'உக்ரைன்' தமிழ் மாணவியின் வீடியோ
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே தற்போது கடும் போர் நடைபெற்று வருகிறது. இதனால், அங்குள்ள மக்கள் அனைவரும் உயிர் பயத்தில் பல்வேறு இடங்களில் தஞ்சம் புகுந்து, நாட்களை கடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், மெட்ரோ சுரங்க பாதையில் சுமார் 500 பேருக்கு மேற்பட்டோர் வரை தங்கி வருகின்றனர்.
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, ஊரடங்கு அமலிலுள்ள நிலையில், கடும் குளிரிலும் அவர்கள் வாடி வதங்கி வருகின்றனர்.
உருக்கமான வீடியோ
அதே போல, தமிழகத்தை சேர்ந்த பல மாணவ மாணவிகளும், சுரங்க பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக, உண்ண உணவும் சரிவர கிடைக்காமல், அங்குள்ள பலரும் கடுமையாக அவதிக்குள் ஆகி வருகின்றனர். இந்நிலையில், தாங்கள் பதுங்கியிருக்கும் மெட்ரோ சுரங்கத்தின் மோசமான நிலையை விளக்கி, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி ஒருவர் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
300 முதல் 500 பேர்
மெட்ரோ சுரங்கத்தில் இருக்கும் சுமார் 300 பேர் முதல் 500 பேர் வரை, ஒரே ஒரு கழிவறையை பயன்படுத்தி வருவதாக, அந்த மருத்துவ மாணவி தெரிவித்துள்ளார். அதே போல, அங்கு ஒரு கழிவறை மட்டும் இருப்பதால், போதிய தண்ணீரும் கிடைக்காமல், அத்தனை பேரும் அதனை மூன்று நாட்களாக பயன்படுத்தி வருகிறோம்.
புதினிடம் கோரிக்கை
இதன் காரணமாக, அங்கிருக்கும் அனைவருக்கும் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், இந்த மோசமான மற்றும் அருவருப்பான நிலை இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்பதும் தனக்கு தெரியவில்லை என்றும் கவலையுடன் அந்த மாணவி குறிப்பிட்டுள்ளார். தங்களின் தற்போதைய நிலையை அறிந்து கொண்டு, மனிதாபிமானத்தை விட ஒன்றும் பெரிதில்லை என்பதை புரிந்து கொண்டு, போரை உடனடியாக நிறுத்துமாறும், ரஷ்ய அதிபர் புதினிடம், மன்றாடி கோரிக்கை வைத்துள்ளார் அந்த தமிழக பெண்.
அந்த மாணவியை போலவே, பலரையும் இது போன்ற இடங்களில், உணவு மற்றும் தண்ணீர் என எதுவும் இல்லாமல், கடும் அவதிக்குள் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.