RUSSIA-UKRAINE WAR: களத்தில் இறங்கிய கூகுள் .. ரஷ்யாவுக்கு பெரிய செக்.. திடீரென போட்ட அதிரடி கண்டிஷன்..
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைன் ரஷ்யா போர் 5வது நாளாக உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இரண்டு தரப்பிலும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. போர் நிறுத்தப்பட வேண்டும் என உலக நாடுகள் ரஷ்யாவை வற்புறுத்தி வருகின்றன. ரஷ்யாவுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன.
ஃபேஸ்புக் வைத்த செக்
உக்ரைன் ரஷ்யா போர் நடந்துவரும் நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக பேஸ்புக் செயல்பட்டு வந்தது. ரஷ்ய ஊடகத்துறையின் பேஸ்புக் பக்கத்துக்கு கட்டுப்பாடுகளை விதித்தது மெட்டா நிறுவனம். ரஷ்ய ஊடகத்துறையின் பேஸ்புக் பக்கத்தில் விளம்பரங்கள் செய்யவும் மானிடைஸ் செய்யவும் மெட்டா நிறுவனம் தடை விதித்துள்ளது. ரஷ்ய அரசுக்குச் சொந்தமான ஊடகங்களைத் தடை செய்வதாக கடந்த 26ம் தேதி அறிவித்தது. பேஸ்புக் பக்கத்தில் இருந்து பணம் பெறவும், விளம்பரம் செய்யவும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டது. இதை மெட்டா நிறுவனம் வெளிப்படையாக அறிவித்தது. அமெரிக்கா ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்திருக்கும் நேரத்தில் பேஸ்புக்கும் ரஷ்யாவுக்கு எதிராக களமிறங்கியது.
ரஷ்யாவுக்கு கடும் நெருக்கடி
மெட்டாவின் இந்த திடீர் தடைக்கு பதிலளிக்கும் விதமாக, ரஷ்யாவின் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு கட்டுப்பாட்டாளர், ரோஸ்கோம்நாட்ஸோர், "ரஷ்ய குடிமக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை" மெட்டா குறைக்கிறது என்று குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து, யூ-டியூப் நிறுவனமும் ரஷ்ய அரசு மற்றும் தனியார் ஊடகங்கள் தங்கள் வீடியோக்களில் விளம்பரங்கள் மூலம் பெரும் வருமானத்துக்கு தடை விதித்தது. குறிப்பாக கூகுள் இணையதளங்களிலும், கூகுளுக்கு சொந்தமான செயலிகள் உள்ளிட்டவற்றிலும் ரஷ்ய நாட்டின் அரசு மற்றும் தனியார் ஊடகங்கள் விளம்பரங்கள் மூலம் பெரும் வருமானத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கூகுள் நிறுவனத்தின் தலைமை அமைப்பான ஆல்பாபெட் அறிவித்துள்ளது.
கூகுள் போட்ட கண்டீசன்
கூகுள் இணையதளத்தில் யூ-டியூப்பில் அரசு மற்றும் தனியார் ஊடகங்களின் வீடியோக்களுக்குள் இடம் பெறும் விளம்பரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதுடன், ரஷ்ய ஊடகங்கள் விளம்பரங்களை வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவன செய்தித் தொடர்பாளர் மைக்கேல் அசிமென் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஊடகங்கள் விளம்பரங்களை வெளியிடுவதன் மூலமாக சமூக வலைதளங்களில் லாபம் ஈட்டுகின்றன. இந்த விளம்பரங்கள் வெளியிட தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதால் ரஷ்யாவுக்கு ஊடகங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படும். இதன் மூலமாக அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனங்கள் ரஷ்யாவுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா உதவி
மேலும், ரஷ்யாவுடனான போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு பல்வேறு நாடுகளும் ஆயுத உதவி மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகின்றன. உக்ரைனுக்கு ஆயுதங்கள் நேரடியாக அனுப்பி வைக்கப்படும் என்று ஜெர்மனி நேற்று அறிவித்திருந்தது.இந்நிலையில் முதன்முறையாக உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது. போர் விமானங்களை எதிர்கொள்ளும் அதிவேக ஏவுகணைகளை நேரடியாக வழங்க அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அந்த ஆயுதங்களை உக்ரைனுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.