"தங்கியிருந்த இடம் இந்திராகாந்தி விமானநிலையம்!".. "வீட்டு நம்பர் 3வது முனையம்!".. 55 நாட்களாக ஏர்போர்ட்டிலேயே வாழ்ந்த 'ஜெர்மனி' குற்றவாளி!
முகப்பு > செய்திகள் > உலகம்ஜெர்மனியைச் சேர்ந்த 40 வயது எட்கார்ட் ஜீபாட் என்பவர் மீது குற்றவழக்குகள் இருந்த நிலையில், தலைமறைவானதை அடுத்து அவரை ஜெர்மனி போலீஸார் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் இவர் கடந்த மார்ச் 18-ஆம் தேதி வியட்நாமின் ஹனோய் நகரில் இருந்து துருக்கி வழியே இஸ்தான்போல் சென்றுகொண்டிருந்தபோது, கொரோனா அச்சுறுத்தலால் அவர் பயணித்த விமானம் டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனை அடுத்து அனைத்து சர்வதேச விமான சேவைகளும் முடக்கப்பட்டு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில் ஏராளமான பயணிகள் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் ஜீபாட் தேடப்படும் குற்றவாளி என்பதால் ஜெர்மனி அரசு மறுத்துவிட்டதோடு அவரை காவலில் எடுக்க முடியாத சூழல் உள்ளதாகவும் தெரிவித்துவிட்டது.
மேலும் தேடப்பட்ட குற்றவாளியான அவருக்கு இந்திய விசாவுக்கு விண்ண்ணப்பிக்கவும், இந்தியாவுக்குள் நுழையவும் முடியாத நிலை உண்டானது. இதனால் விமான நிலையத்திலேயே தொடர்ந்து தங்க ஆரம்பித்த அவர் விமான நிலையத்தில் உள்ள கேண்டீன்களில் உணவு வாங்கி சாப்பிட்டு, அங்கிருந்த அதிகாரிகளின் உதவியுடன் வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் ஒரு வழியாக நேற்று அதிகாலை 55 நாட்களுக்கு பிறகு டெல்லியில் இருந்து நெதர்லாந்து சென்ற விமானம் மூலம் அவர் அனுப்பப்பட்டார். அதற்கான டிக்கெட் கட்டணமான ரூ. 43 ஆயிரத்தை அவரே செலுத்தினார். அதற்கு முன் அவருக்கு டெல்லியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதோடு அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்றும், வெளிநாடு செல்வதற்கான விண்ணப்பப் படிவத்தில் இந்தியாவில் அவர் தங்கி இருந்த இடம், “இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம்” என்றும் தங்கியிருந்த வீடு “3வது முனையம்” என்று ஜீபாட் பதிவு செய்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
