இம்ரான் கான் மீது பாய்ந்த துப்பாக்கிக்குண்டு.. பேரணியில் நடந்த விபரீதம்.. உச்சகட்ட பதற்றத்தில் பாகிஸ்தான்..!
முகப்பு > செய்திகள் > உலகம்பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பது உலக அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | Video : "கயல்விழியிடம் செலவுக்கு பணம் கேட்டா பதில் இப்படிதான் வரும்"... போட்டு உடைத்த சீமான் 😍 Exclusive
பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதன் காரணமாக எதிர்க் கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தன. இதனை தொடர்ந்து இம்ரான் கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் திரும்பப் பெறுவதாக அறிவித்தன. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவெடுத்திருந்த நிலையில் கடந்த ஏப்ரலில் பதவி விலகினார் இம்ரான் கான்.
இதனை தொடர்ந்து பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்-ன் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், இம்ரான் கான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆளும் ஷெபாஸ் ஷெரீப் -ன் கட்சி சுமத்திவந்தது. இதன் காரணமாக இம்ரானின் எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்ய அந்நாட்டு தேர்தல் ஆணையம் முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகின.
இதனை எதிர்த்து, நாடுதழுவிய அளவில் போராட்டங்களை நடத்துமாறு கட்சி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தது இம்ரான் கானின் தெக்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சி. இதன் ஒருபகுதியாக, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து, தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பேரணி நடத்துவதாக பிடிஐ கட்சி அறிவித்தது. இதில் பங்கேற்பதற்காக இம்ரான் கான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜ்ரன்வாலா பகுதிக்கு நேற்று சென்றார்.
அப்போது அல்லாவாலா சவுக் எனும் இடத்தில் திரண்டிருந்த மக்களிடையே உரையாற்ற நினைத்த இம்ரான் கான் அங்கிருந்த கண்டெய்னர் மீது ஏறி நின்றார். அப்போது கூட்டத்தில் இருந்த இருவர் அவரை துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது. இதில் இம்ரான் கானின் வலதுகாலில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்தது. இதனால் அவர் சரிந்து விழ, உடனடியாக லாகூரில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே, இம்ரான் கானை துப்பாக்கியால் சுட்டவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்திருக்கின்றனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மற்றொருவர் அங்கிருந்து தப்பியோடியதாக தெரிகிறது. இந்த துப்பாக்கிசூட்டில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. காயமடைந்தவர்களில் இம்ரானின் நெருங்கிய நண்பரும் செனட் உறுப்பினரான பைசல் ஜாவேத்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த சம்பவம் பாகிஸ்தானில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.