கடும் பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான்.. ZOO மேல கை வைக்க முடிவெடுத்த அதிகாரிகள்.. நொறுங்கிப்போன மக்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனையடுத்து, மிருககாட்சி சாலையில் உள்ள சிங்கங்களை ஏலத்தில் விடுவதாக அறிவித்திருக்கிறார்கள் அதிகாரிகள்.
பொருளாதார நெருக்கடி
பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதன் காரணமாக எதிர்க் கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தன. இதனை தொடர்ந்து இம்ரான்கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் திரும்பப் பெற்றதை தொடர்ந்து இம்ரான் கான் பதவி விலகினார். இதனை தொடர்ந்து பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்-ன் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் அங்கே, பொருளாதார நெருக்கடிகள் சீராகவில்லை. இதன் காரணமாக அந்நிய செலவாணி கையிருப்பு கடுமையாக குறைந்துள்ளது.
பாகிஸ்தானில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தி கணிசமான அளவு குறைந்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள், நாடு முழுவதும் நீண்ட நேரம் மின்சாரம் தடைப்படுவதால் மொபைல் மற்றும் இணைய சேவைகளை நிறுத்துவது குறித்து எச்சரித்து வருகின்றனர். இப்படி நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான் அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பு மக்களை மேலும், கவலையடைய செய்திருக்கிறது.
ஏலம்
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள மிருகக்காட்சி சாலையில் உள்ள சிங்கங்களை ஏலத்தில் விட இருப்பதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சிங்கங்களுக்கு உணவு அளிக்க முடியாத சூழ்நிலையாலும், பராமரிப்பு செலவை குறைக்கும் விதத்திலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மிருகக்காட்சிசாலையில் தற்போது 29 சிங்கங்கள் உள்ளன. இவற்றுள் இரண்டு முதல் ஐந்து வயதுக்குட்பட்ட 12 சிங்கங்களை ஏலத்தில் விற்பனை செய்ய அதிகாரிகள் ஏலம் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆகஸ்ட் 11 ஆம் தேதி இந்த ஏலம் நடைபெற இருக்கிறது. இதுகுறித்து பேசிய இந்த மிருகக்காட்சி சாலையின் துணை இயக்குனர் தன்வீர் அகமது ஜான்ஜுவா," இந்த விற்பனையின் மூலமாக சிங்கங்களின் எண்ணிக்கையை குறைப்பதோடு, செலவினங்களையும் குறைக்க முடியும்" என்றார்.
நாளை நடைபெறும் ஏலத்தில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது பாகிஸ்தான் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.