"டீ குடிப்பதை குறைச்சுக்கங்க".. மக்களிடம் கோரிக்கை வச்ச பாகிஸ்தான்.. என்னதான் சிக்கல்?
முகப்பு > செய்திகள் > உலகம்பாகிஸ்தான் அரசு பொருளாதார சிக்கல்களால் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் டீ குடிப்பதை குறைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது அந்நாட்டு அரசு.

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதன் காரணமாக எதிர்க் கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தன. இதனை தொடர்ந்து இம்ரான்கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் திரும்பப் பெற்றதை தொடர்ந்து இம்ரான் கான் பதவி விலகினார். இதனை தொடர்ந்து பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்-ன் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் அங்கே, பொருளாதார நெருக்கடிகள் சீராகவில்லை. இதன் காரணமாக அந்நிய செலவாணி கையிருப்பு கடுமையாக குறைந்துள்ளது.
அதிக இறக்குமதி
உலகில் அதிகம் தேயிலை இறக்குமதி செய்யும் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்றாகும். 501 மில்லியன் யூரோக்களுக்கு தேயிலையை இறக்குமதி செய்கிறது பாகிஸ்தான். கைவசம் இருக்கும் அந்நிய செலாவணி குறைந்துள்ளதால் பொதுமக்கள் தேநீர் அருந்துவதை குறைத்துக்கொள்ளுமாறு பாகிஸ்தான் அரசு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பேசிய பாகிஸ்தானின் திட்டம் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அஷன் இக்பால்," பாகிஸ்தான் மக்கள் டீ குடிப்பதை குறைத்துக்கொள்ளவேண்டும். இதனால் அரசுக்கு இறக்குமதி செலவு குறையும். பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பு தற்போது மிகவும் குறைவாக இருக்கிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் அரசு கடன் வாங்கித்தான் டீ தூளை இறக்குமதி செய்கிறது. இதனால் நீங்கள் குடிக்கும் தேநீரின் அளவில் ஒன்று அல்லது இரண்டு கோப்பைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்'' என பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார். இது சமூக வலை தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீரமைப்பு நடவடிக்கைகள்
அதேபோல, நாட்டில் மின்சார பற்றாக்குறை நிலவுவதால் புதிய சீரமைப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, பாகிஸ்தானில் இயங்கிவரும் கடைகள் மற்றும் பிற வர்த்தக நிறுவனங்களை இரவு 8.30 மணியுடன் மூட உத்திரவிடுவது பற்றி அந்நாட்டு அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது.
பொருளாதார நெருக்கடி காரணமாக, பொதுமக்களை டீ குடிப்பதை குறைத்துக்கொள்ளுமாறு பாகிஸ்தான் அமைச்சர் வலியுறுத்தியுள்ளது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்
