ஆன்லைனில் ஐபோன் ஆர்டர்.. வந்த பார்சலை திறந்த இளைஞர்.. உள்ள இருந்தத பாத்து ஒரு நிமிஷம் ஆடிப் போய்ட்டாரு
முகப்பு > செய்திகள் > உலகம்கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக ஐபோன் ஆர்டர் செய்து காத்திருந்தவருக்கு, கிடைத்த பார்சலில் இருந்த பொருள், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய காலகட்டத்தில், ஆன்லைன் மூலம், பொருட்களை ஆர்டர் செய்யும் வழக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. ஷாப்பிங் மால் அல்லது குறிப்பிட்ட கடைக்குச் சென்று, ஒரு பொருளை உற்று நோக்கி வாங்குவதை விட, அலைந்து திரியாமலே ஆன்லைனில் பொருட்கள் ஆர்தர் செய்யலாம்.
நமது மொபைல் போன் அல்லது கணினி மூலம், மிகவும் பொறுமையாக, பொருளின் தரம் மற்றும் நமக்கு ஏற்ற விலை அனைத்தையும் அறிந்து, அதனைத் தேடிப் பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
ஏமாற்றும் ஆன்லைன் ஆர்டர்?
ஆனால், இப்படி ஆசை ஆசையாக, நாம் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் பொருட்களுக்கு பதில், சம்மந்தமே இல்லாத ஒன்று வந்ததாக கூறப்படும் செய்திகளை நாம் சமீப காலத்தில் நிறையவே படித்துள்ளோம். ஹெட் போன் ஆர்டர் செய்தவருக்கு சோப், ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு கற்கள் இப்படி பல செய்திகளை நாம் கடந்து வந்துள்ளோம்.
ஐபோன் 13
இந்நிலையில், தற்போது அப்படி ஒரு சம்பவம் தான் மீண்டும் அரங்கேறியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் லீட்ஸ் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் டேனியல் காரோல். இவர், கடந்த சில தினங்களுக்கு முன் ஆன்லைன் மூலம் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் (IPhone 13 Pro Max) போனை ஆர்டர் செய்துள்ளார். இதற்காக, £1,045 பவுண்டுகளை (இந்திய மதிப்பில் சுமார் 1 லட்சம்) ஆன்லைன் மூலம் செலுத்தவும் செய்ததாக கூறப்படுகிறது.
பார்சலில் டவுட்
இதனிடையே, தான் ஆர்டர் செய்த மொபைல் போன் வரவும் தாமதம் ஆனதாக தெரிகிறது. கிட்டத்தட்ட குறிப்பிட்ட தினத்தை விட, இரண்டு வாரங்கள் தாமதமாக டேனியலிடம் பார்சல் வந்துள்ளது. இதனை வாங்க, சுமார் 24 மெயில் தூரம் வரை தானே பயணித்து சென்று வாங்கி வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. ஆனால், பார்சலை வீட்டில் கொண்டு வந்த பிறகு தான், அதில் ஏதோ தவறு இருப்பதாக டேனியலிற்கு சந்தேகம் எழுந்துள்ளது.
அதிர்ச்சியில் இளைஞர்
எடையிலுள்ள மாற்றம், பேக்கிங்கில் இருக்கும் குறை, என அனைத்தும் டேனியலிற்கு சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது. உடனடியாக, பார்சலை திறந்து பார்த்த அவருக்கு, தான் எண்ணியது போலவே, அதிர்ச்சி தான் காத்திருந்தது. காரணம், மொபைல் போன் இருக்க வேண்டிய இடத்தில், இரண்டு Diary Milk Oreo White சாக்லேட்டுகள், டாய்லெட் பேப்பர் மூலம் சுருட்டி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
பார்சல் மீது புகார்
இதனால் பதறிப் போன டேனியல், மறு கணமே தனது பார்சலை கொண்டு வந்த DHL நிறுவனத்தாரிடம் புகார் தெரிவித்துள்ளார். 'வர வேண்டிய நேரத்திலும் எனது மொபைல் போன் வந்து சேரவில்லை. ஒருமுறை டெலிவரிக்கு தயாராகி விட்டது என தகவல் வந்தது. ஆனால், மீண்டும் தாமதம் ஆகும் என குறிப்பிடப்பட்டது. இப்படி, எனது மொபைல் போன் வருவதற்கே பலவித சிக்கல்கள் இருந்தது. நானும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் தான் வேலை செய்கிறேன். பார்சல் என்னிடம் வந்து சேர, ஏன் இவ்வளவு நேரமும், சிக்கல்களும் எடுத்துக் கொண்டது என எனக்கு புரியவில்லை' என டேனியல் குறிப்பிட்டுள்ளார்.
நடவடிக்கை
தொடர்ந்து, டேனியலின் புகாருக்கு பதிலளித்த DHL நிறுவனம், 'நாங்கள் உங்களது புகாரை முன்னுரிமை எடுத்து விசாரித்து வருகிறோம். உங்களுக்கு இதற்கான மாற்றுப் பொருள் கிடைக்க பெறுவதற்கான முயற்சியையும் எடுத்து வருகிறோம்' என தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக புது மொபைல் போன் வேண்டி காத்திருந்த நபருக்கு, பதிலாக சாக்லெட் வந்து சேர்ந்த செய்தி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
