"நாங்க விசாரணைக்கு ஒத்துக்குறோம்பா!" .. 'கொரோனா' விவகாரத்தில் 'சரண்டர்' ஆன 'சீனா'.. 'சும்மாவா?'.. 'உலக நாடுகள்' கொடுத்த 'தொடர்' அழுத்தம் 'அப்படி'!
முகப்பு > செய்திகள் > உலகம்சர்வதேச அளவில் கொரோனாவுக்கு 47 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 17 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த பாதிப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சிகிச்சை பெற்று மீண்டுள்ளதாகவும், 3 லட்சத்து 15 ஆயிரம் பேர், கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி பலியாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சீனாவின் அலட்சியத்தால்தான் இந்த நோய் உலகம் முழுவதும் பரவியது என்றும் அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், வுஹானில் உள்ள ஆய்வகம் ஒன்றில் இருந்துதான் கொரோனா வெளியே வந்திருக்க வேண்டும் என்றும் தொடர்ந்து கூறி வந்தார். இதற்கு ஆஸ்திரேலியாவும் ஆதரவு தெரிவித்தது. எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து மறுத்து வந்த சீனா, கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் உருவானது அல்ல என்றும் இயற்கையாக உருவானது என்றும் விளக்கம் கொடுத்து வந்தது.
இந்த நிலையில் நேற்று தொடங்கிய உலக சுகாதார அமைப்பின் 73வது கூட்டத்தில் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா எப்படி பரவியது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் இணைந்து தீர்மானம் கொண்டு வந்ததை அடுத்து 194 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள உலக சுகாதார அமைப்பில், இந்த தீர்மானத்துக்கு 120க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
விளைவு, முதன்முறையாக கொரோனா விவகாரத்தில் விசாரணை நடத்துவது குறித்த முடிவுக்கு சீனா ஒத்துழைப்பு தருவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. இது தொடர்பாக மே 18 மற்றும் மே 19 உள்ளிட்ட இரண்டு நாட்கள், “கொரோனா விவகாரத்தில் சீன வெளிப்படையாக பொறுப்புடன் நடந்து கொண்டதாக” சீன அதிபர் ஜி ஜின்பிங் கான்ஃபரன்ஸ் மூலம் உரையாற்றினார். மேலும் இந்த கடினமான சூழலில் கொரோனா வைரஸ் விவகாரத்தில் எல்லோரையும் சார்ந்த ஒருமித்த விசாரணைக்கு சீனா ஆதரவு அளிப்பதாகவும், மக்களின் உயிர்காக்கும் இந்த உலக சுகாதார அமைப்புக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டியது தமது கடமை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், கொரோனாவுக்கான தடுப்புமருந்தை சீனா கண்டுபிடித்தால் அது உலக நன்மைக்கான பொதுச் சொத்தாகவே அறிவிக்கப்படும் என்றும், வளரும் நாடுகளுக்கு அது உடனடியாக கிடைப்பதை சீனா கண்டிப்பாக உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் உருவானது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உலக நாடுகள் கொடுத்த தொடர் அழுத்தம் காரணமாக சீனா முதல்முறையாக இந்த விவகாரத்தில் இறங்கி வந்துள்ளதும், அதே சமயம், உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவு தெரிவித்து வருவதாக அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
